எருக்கன் குளம் நிரம்பி வெளியேறிய நீரால் பல ஏக்கர் பயிர்கள் நாசம்

*அதிகாரிகள் ஆய்வு

அன்னூர் : கோவை அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் 95 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கன் குளம் உள்ளது. இந்த குளத்தில் அத்திக்கடவு உபரி நீர் மற்றும் மழை நீரால் மூன்று நாட்களுக்கு முன் குளம் நிரம்பியது. இதனையடுத்து குளத்திலிருந்து வாய்க்கால் போல் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, கரும்பு, நெல், சோளம், மசால் புல் ஆகியவை கடந்த மூன்று நாட்களாக தேங்கியுள்ள நீரால் அழுகி வருகின்றன. தென்னந்தோப்பில் குளம் போல் நீர் தேங்கி உள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘குளத்தை தூர்வார வேண்டும். கரைகளை பலப்படுத்த வேண்டும். குளத்தில் உள்ள வடக்கு பகுதி மதகை பராமரித்து சரிபார்த்து மதகைத் திறந்து மதகு வழியாக குளத்து நீர் வெளியேறச் செய்ய வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். வடக்கு மதகு வழியாக குளத்து நீர் வெளியேறினால் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தாசபாளையம், கஞ்சப்பள்ளி, செங்காளிபாளையம், ராமநாதபுரம், நம்பியம்பாளையம் வழியாக அவிநாசி குளத்திற்கு நீர் சென்று விடும். மேலும் எருக்கன் குளத்து நீர் செல்லும் பாதையில் உள்ள மண்மேடுகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’’ என்றனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அன்னூர் தாசில்தார் குமரி ஆனந்தன், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி ஆகியோரிடம் விவசாயிகளும் பொதுமக்களும் மனு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் பேசுகையில் ‘‘குளத்து நீர் வெளியேறுவது அதிகரித்தால் பயிர்கள் மட்டுமல்லாமல் குடியிருப்புகளும் பாதிக்கப்படும்.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடித்துச் செல்லப்படும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என்றனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் எருக்கன் குளத்திலும், குளத்திலிருந்து உபரி நீர் செல்லும் இடத்திலும் நேற்று ஆய்வு செய்தனர்.

The post எருக்கன் குளம் நிரம்பி வெளியேறிய நீரால் பல ஏக்கர் பயிர்கள் நாசம் appeared first on Dinakaran.

Related Stories: