ஒரேநாளில் மீண்டும் 85 விமானங்களுக்கு மிரட்டல் குண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார்? எக்ஸ், மெட்டாவிடம் பயனர்கள் விவரம் கேட்கிறது ஒன்றிய அரசு

புதுடெல்லி: இந்திய விமானங்களை குறி வைத்து நேற்று ஒரேநாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர். குண்டு மிரட்டல் விடுத்த பயனர்கள் விவரங்களை எக்ஸ், மெட்டா தளத்திடம் ஒன்றிய அரசு கேட்டுள்ளது.  இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா, விஸ்தாரா, ஆர் ஆகாசா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பயணிகள் விமானத்தை இயக்கி வருகின்றன. இந்த பயணிகள் விமான நிறுவனங்களுக்கு கடந்த சில நாட்களாக எக்ஸ் பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “பயணிகள் விமானங்களுக்கு விடப்படும் மிரட்டல்களை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிரட்டல் விடும் நபர்கள் விமானங்களில் பறக்க தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 85 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் தலா 20 விமானங்களுக்கும், ஆகாச நிறுவனத்தின் 25 விமானங்களுக்கும் மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 11 நாட்களில் 250 விமானங்களுக்கு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் இதுபோன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் மற்றும் அழைப்புக்களை ஒன்றிய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

இதுபோன்று விமான பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பின்னால் இருப்பவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. சமூக ஊடக வலைதளங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயனர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து இந்திய விமான நிறுவனங்களை குறிவைத்து போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயனர்களின் தரவு விவரங்களை மெட்டா மற்றும் எக்ஸ் தளங்கள் ஒன்றிய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி உள்ளது. பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு போலி வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

The post ஒரேநாளில் மீண்டும் 85 விமானங்களுக்கு மிரட்டல் குண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார்? எக்ஸ், மெட்டாவிடம் பயனர்கள் விவரம் கேட்கிறது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: