விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக மாற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியதில் மகிழ்ச்சி; விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக மாற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். விளையாட்டு, இளைஞர் நலன் துறை வளர்ந்திருக்கிறது; அத்துறை அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி, துணை முதல்வரானதில் விளையாட்டு வீரர்களின் பங்கும் உள்ளது. தமிழ்ப் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக செஸ் ஒலிம்பியாட் அமைந்தது. விளையாட்டு போட்டிகள் நடத்துவது மாணவ, மாணவிகளுக்கு உற்சாகத்தை தருகிறது. விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு விளையாட்டுத் துறை பல்வேறு மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. விளையாட்டுத்துறையில் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு புகழ்பெற்றுள்ளது. விளையாட்டுகளை மேம்படுத்த திறமையான வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். கல்வி, விளையாட்டுத் துறைக்கு சரி சமமாக திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. தேசிய, சர்வதேச அளவில் வீரர்கள் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும். விளையாட்டு என்பது வெறும் போட்டி அல்ல; அது உடல் வலிமையும், மன வலிமையும் தரக் கூடியது. விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

 

The post விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக மாற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! appeared first on Dinakaran.

Related Stories: