×
Saravana Stores

திருப்பம் தரும் திருப்புகழ்! 11

ஞானம் பெறலாம்! நலம் பெறலாம்!

திருமுருகப் பெருமானின் தரிசனமும், உபதேசமும் பெற்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் அதி அற்புதமான மந்திரசக்தி வாய்ந்தது. நம் செந்தமிழ் மொழியில் திருக்குறள் எவ்வாறு தோன்றிய காலத்திலேயே பிற புலவர்களால் பாராட்டப் பெற்று தற்சிறப்பு பாயிரம் பெற்றதோ, அதே போன்று திருப்புகழும் தோன்றிய காலத்திலேயே பிற புலவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்று தற்சிறப்புப் பாயிரமாக பதினாறு பாராட்டு வெண்பாக்கள் பெற்றது.

‘திருப்புகழைக் கற்பார் கரை ஏறுவார்’ என்றும்,
‘திருப்புகழை அர்ச்சிக்க முத்தி எளிதாகுமே’ என்றும் சிறப்புறப் பாராட்டிய புலவர்கள் மேலும்,
‘ஞானம் பெறலாம்! நலம் பெறலாம்! எந்நாளும்,
வானம் அரசாள் வரம் பெறலாம்! மோன,
வீடறேலாம்! யானைக்கு இளையான்
திருப்புகழைக்கூறினார்க்கு ஆமே இக்கூறு!’
என உவகைமேலிட்டுதம் உள்ளக் கருத்தை உணர்த்தி உள்ளனர்.

ஆறுமுகப் பெருமானின் பாதக் கமலங்களை ஆயிரமாயிரம் அலைக் கரங்களால் அனுதினமும் வருண பகவான் வணங்கும் மேலான தலம் திருச்செந்தூர். செந்திலாதிபனைச் சேவித்த அருணகிரியார், சிந்தை மகிழ்ந்து பல பாடல்கள் பாடினார். மானிடர்களாக இவ்வுலகில் அவதரித்த நமக்கு கல்விச் செல்வமும், ஆரோக்கியமான உடல் நலமும் வாய்த்து விட்டால் வாழ்வின் மற்ற வசதிகளை எளிதாகப் பெற்றுவிடலாம் அல்லவா! எனவே அருணகிரியார்;

‘‘நோய் தலந்த வாழ்வுறாமல் நீ கலந்துள் ஆகும் ஞான
நூல டங்க ஓதவாழ்வு தருவாயே!’’
– என வேண்டுகிறார்.

``நாலும் ஐந்து வாசல் கீறு
தூறுடம் கால் கை ஆகி
நாரி என்பில் ஆகுமாக மதனூடே
நாதம் ஒன்ற ஆதிவாயில் நாடகங்கள் ஆன ஆடி
நாடறிந்திடாமல் ஏக வளரா முன்
நூல் அனந்த கோடிதேடி மால் மிகுந்து பார்உளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி விளைதீமை
நோய் கலந்த வாழ்வுறாமல் நீகலந்துள் ஆகும் ஞான
நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே!

ஓசை நலம் உயர்ந்து விளங்கும் இப்பாடலில் ஞானமும், தேக நலமும் நாம்பெற முருகப் பெருமானிடம் முறையிடுகிறார்.‘‘நாலும் ஐந்து வாசல்’’ என்பது நம் உடம்பில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிப்பது ஆகும். கண், காது, மூக்கு, ஆசனவாய் முதலான ஒன்பது துளைகள் கொண்டது இவ்வுடல்.‘மலம் சேரும் ஒன்பது வாயிற் குடிலை’ என திருவாசகம் முதற்பகுதி சிவபுராணம் குறிப்பிடும். ஒன்பது ஓட்டைகள் கொண்ட இவ்வுடம்பில், உயிர் பொருந்தி இருப்பதுதான் வியப்பிற்குரிய ஒன்று. உயிர் விடுவது ஆச்சர்யத்திற்கு உரிய ஒன்று அமல், என அருளாளர்கள் கூறுகின்றனர். எனவே இவ்வுடம்பில் உயிர் தங்கி இருக்கும் போதே ஞான நூல்களைப் பயின்று நன்னெறியில் பொருந்த வேண்டும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்
நல்வினை
மேற்சென்று செய்யப்படும்
– என்கிறார் திருவள்ளுவர்.

அருணகிரிநாதர் ஞான நூல்களை எப்படி கற்க வேண்டும், எப்போது கற்க வேண்டும், எதற்காக பயில வேண்டும் என்பதை கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றில் அழுத்தம் திருத்தமாகத் தெளிவாக
எடுத்துரைக்கின்றார்.

“அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்! எரி மூண்டதென்ன
விழித்துப் புகைஎழ பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே!

‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை’ என்கின்றார் வள்ளுவர். மானிடப் பிறவி சிறந்ததுதான் என்றாலும், இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் திருவடி என்னும் கரையை அடைவதே மனிதர்களாகப் பிறந்தவரின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றே அனைத்து அருளாளர்களும் வலியுறுத்துகின்றனர். எனவே, பிறவாமையைத் தருகின்ற முருகப் பெருமானின் ஞான நூல்களைப் படிக்க வேண்டும். அவ்வாறு கற்பதையும் பிழையின்றித் திருத்த முறப்பயிலுதல் அவசியம். மேலும், இளமைக் காலத்திலேயே படித்து நினைவில் நிலை நிறுத்திக் கொண்டு, அன்றாடம் தெய்வ வழிபாட்டில் ஓதுதல் வேண்டும்.

‘கற்க கடசற கற்பவை’ என்பது திருக்குறள்.. அதனையே எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் என்றும் கழுத்தில் சுருக்கு விழும்போதா கற்பது என்றும் வாக்கிற்கு அருணகிரி பொருத்த முறப் புகல்கின்றார்.‘எம் பெருமானே! உன்னை வணங்கு கின்றேன்’ என்பதை ஒருவர் எம்பெருமானே உன்னை வணங்குகின்றேன் என தப்பாக ஒப்பித்தால் அவர் வாழ்வில் விதி எப்படி விளையாடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

‘இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து முதுமையில் படிப்பதோ தண்ணீரில் எழுதுவதைப் போல சற்று நேரத்தில் மறந்து, மறைந்து போய்விடும். இத்திருப்புகழின் பற்பகுதியில் மார்க்கண்டேயன், மன்மதன், கஜேந்திரன், திருமால் பற்றிய செய்திகள் இணைந்து ரத்தினச் சுருக்கமாக வெளிப்படுகின்றது.

“காலன் வந்து பாலன் ஆவி தாய என்று பாசம் வீசு
காலம் வந்து ஓம் ஓலம் எனும் ஆதி
காமன் ஐந்து பாணமோடு வேமினென்று காணும் மோனார்
காள கண்டரோடு வேதம் மொழிவோனே!
ஆலமொன்று வேலையாகி ஆனை அஞ்சல் தீரும் மூல
ஆழி அங்கை ஆயன் மாயன் மருகோனே!
ஆரணங்கள் தாளை நாட வாரணங்கை மேவும் ஆதி
ஆன செந்தில் வாழ்வதான
பெருமாளேஃ’’

‘பாலன் ஆவி’ என்றால், மார்க்கண்டேயன் உயிர் என்று பொருள்.‘காமன் ஐந்து பாணமோடு’ என்றால், ஐந்து மலர்க்கணை வீசும் மன்மதன் என்று பொருள்.‘ஆனை அஞ்சல் தீரும் மூல ஆழி அங்கே ஆயன் மாயன்’ என்றால், கஜேந்திரனைக் காக்க கத்ராயுதத்தைச் செலுத்திய திருமால்’ என்பது பொருள்.‘வாரணம் கைமேவும் ஆதி’ என்றால், சேவற்கொடி தாங்கி உள்ள செந்தில் வேலவன் என்பது பொருள்.

மேற்கண்டவாறு திருப்புகழ்ப் பாடல்கள் பலவற்றில், புராணச் செய்திகளையும், இதிகாச மாந்தர்களையும், ஷண்மத மூர்த்தியரின் கீர்த்திகளையும் அடுக்கியுள்ள அருணகிரியாரின் ஆழ, அகல நுட்பங்களை அளக்க நம் ஆயுள் போதாது. மார்க்கண்டேயரைக் காலனிடமிருந்து காத்தவரும் மன்மதனை நெற்றிக்கண் நெருப்பால் நிர் மூலம் செய்தவருமான சிவபெருமானுக்கு வேத முதலாகிய பிரணவப் பொருளைப் பேசியவரே!

‘ஆதிமூலமே’ என்று அபயக்குரல் கொடுத்த கஜேந்திரனைக் காத்த திருமாலின் மனதிற்கு கந்த மருகரே! சதுர் வேதங்களும், சரணாரவிந்தங்களைத் துதிக்க கோழிக்கொடி ஏந்தி அலைகள் கூக்குரலிட்டு பிரணவம் ஒதுகின்ற பெருமைமிக்க திருச்செந்தூரில் திகழ்பவரே! பிறவி நோய் நீங்கி அடியேன் பெருவாழ்வு பெற அருள்க!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

 

The post திருப்பம் தரும் திருப்புகழ்! 11 appeared first on Dinakaran.

Tags : Arunagirinathar ,Thirumuruga Peruman ,
× RELATED முருகனடியார்களின் விருதுகளுக்கு...