ஜோலார்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்

*பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில் வாரம்தோறும் புதன்கிழமை அன்று வார சந்தை நடைபெறுகிறது.

இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காய்கறிகள், தானியங்கள் போன்ற விளைபொருட்கள் மற்றும் ஆடு, கோழி போன்றவற்றை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் சந்தையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் என நேற்று விற்பனைக்கு வந்தது. இதனால் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதிக்குட்பட்ட பொன்னேரி, ஏலகிரிமலை, நாட்றம்பள்ளி, மண்டலவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்க குவிந்தனர்.

₹3 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ப ஆடுகள் விலை போனது. இதில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகை ஒட்டி ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதேபோன்று ₹500 முதல் முதல் 2 ஆயிரம் வரையிலான கோழிகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஆடு, கோழி போன்றவற்றை அதிகாலை முதல் வாங்குவதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் கூடியதால் சந்தை பகுதி களைகட்டியது.

The post ஜோலார்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: