மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இரவு நேரங்களில் இசிஆர் சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள்

மாமல்லபுரம், அக். 24: மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து ஓய்வு எடுப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை, கறவை நேரம் போக மற்ற நேரங்களில் சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால், மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இசிஆர் சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை ஏராளமான மாடுகள் சாலைகளில் ஜாலியாக உலா வருகின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், மருத்துவமனைக்கு செல்வோர், தனியார் கம்பெனிகளில் ஷிப்ட் முடிந்து வீடு திரும்புவோர் உள்பட பலரும் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.

வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்டு மிரண்டு அங்குமிங்கும் ஓடும் மாடுகளால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களையும், மாடுகள் முட்டி தள்ளுகின்றன. இரவு நேரங்களில் இசிஆர் சாலையில் நடுரோட்டில் படுத்து உறங்கும் மாடுகளால், தனியார் கம்பெனிகளுக்கு செல்லும் வேன், ஷேர் ஆட்டோ, உதிரி பாகங்கள் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் அரசு பேருந்துகள் உள்பட பல வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும், காலை நேரங்களில் இளந்தோப்பு, பட்டிப்புலம் திருவிடந்தை ஆகிய இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் இசிஆர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும், அதே தவறை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இரவு நேரங்களில் இசிஆர் சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: