2026ல் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர ரெய்டா? அடுத்து முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு குறி; ஓபிஎஸ் பத்த வெச்ச நெருப்பு; பரபரப்பு தகவல்கள்

திருச்சி: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடியின் நண்பர் வீட்டில் ரெய்டு நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதில், அதிமுக தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ‘பனிப்போர்’ ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த விவகாரம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் சென்றது.

பின்னர், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்பட சில நிர்வாகிகள் தனி அணியாக (அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு) செயல்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும்- எடப்பாடிக்கும் இடையே வார்த்தை போர் முற்றியது. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் குறித்து அண்ணாமலை பேசிய விவகாரம் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜவுடன் கூட்டணியை முறித்து கொள்ள வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். தொடர்ந்து, பாஜவுடன் கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது. பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜ படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அதிமுகவை மீண்டும் பாஜ கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என பாஜ டெல்லி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது. முன்னதாக, அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என பாஜ நினைக்கிறதாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ், சசிகலாவை மீண்டும் சேர்க்க முடியாது என கறராக கூறி வருகிறார். இது பாஜவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். முக்கியமாக, ஓபிஎஸ் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியான வைத்திலிங்கம் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக ஓபிஎஸ்க்கும், வைத்திலிங்கத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாம். ஓபிஎஸ் சொல்வதை வைத்திலிங்கம் கேட்பது கிடையதாம். இவர்கள் இருவருக்குமான விரிசில் நீண்டு கொண்டு செல்வதாக தெரிகிறது.

இதுகுறித்து பாஜ மேலிடத்தில் ஓபிஎஸ் சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய நண்பர்கள் விவரங்களை அவர் விரிவாக எடுத்து கூறி, ஆவணங்களையும் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிமுகவுக்கு மீண்டும் செல்ல நினைத்த வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதிமுக முக்கிய நிர்வாகிகள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் விரைவில் ரெய்டு இருக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் எடப்பாடிக்கு செக் வைத்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தானாக வர வேண்டும், எவ்வித நிபந்தனையும் இருக்க கூடாது என பாஜ மேலிடம் நினைக்கிறதாம். அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி இளங்கோவனின் கல்வி நிறுவனங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடந்த சம்பவம் அதிமுகவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈர்ப்பு சக்தி கட்சி அதிமுக பூக்களைத் தேடி தேனீக்கள் நிச்சயம் வரும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
மேட்டூர்: ஈர்ப்பு சக்தி உள்ள கட்சி அதிமுக., பூக்களைத் தேடி தேனீக்கள் நிச்சயம் வரும் என்று கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வனவாசியில் நங்கவள்ளி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: ஜனநாயக முறைப்படி இயங்கக்கூடிய இயக்கம் அதிமுக மட்டுமே. எம்.ஜி.ஆருக்கு வாரிசுகள் இல்லை. அம்மாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம்தான் அவர்களது வாரிசுகள். அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது. வலிமையான கட்சி அதிமுக.

பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் என்னென்ன திட்டங்கள் செய்தோம் என என்னால் கூற முடியும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரலாம். இதில், அதிமுக வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும். நாம் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் பூக்கள். பூக்களைத் தேடி தேனீக்கள் நிச்சயம் வரும். அப்படி ஈர்ப்பு சக்தி உள்ள கட்சி அதிமுக. எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து தோல்வியை பெற்றதும் இல்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

The post 2026ல் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர ரெய்டா? அடுத்து முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு குறி; ஓபிஎஸ் பத்த வெச்ச நெருப்பு; பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: