திருமணத் தடைக்கு அவசியம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தைச் சொல்ல முடியுமா?

– சுரேஷ் சந்திரகுமார், திருவண்ணாமலை.

நிச்சயமாக. வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது முடியாவிட்டால் காலை 7 மணிக்கு, பசுவை வலம் வந்து வணங்குங்கள். அகத்திக்கீரை, பழம் கொடுங்கள். தொடர்ச்சியாக சில நாட்கள் செய்து வந்தால், கிரக தோஷங்கள் விலகி திருமணத் தடைகள் நீங்கும். காரணம், ஒரு பசுவை வணங்கும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஒருசேர வணங்குவதாகவும், குறிப்பாக மகாலட்சுமியின் பேரருளைப் பிரார்த்திப்பதாகவும் பொருள். இது எளிமையான வழிபாடு. பெரும்பாலான தோஷங்களுக்கு
பிராயச்சித்தமான வழிபாடு.

?ஹோமங்களை மாலை நேரத்தில் செய்யலாமா?

– பிரகாஷ், வேலூர்.

பொதுவாக, ஹோமம் செய்வதற்கு தனி நேரம் இல்லை என்றாலும், சூரிய உதயத்திற்கு பின், அதாவது காலை 7 மணி முதல் ஒரு 12 மணிக்குள் ஹோமத்தைத் தொடங்கிவிட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு முன்னால் நிறைவு செய்து விடுவது நல்லது. விதிவிலக்காக சில ஹோமங்கள் தொடர்ந்து இரவிலும் நீட்டிப்பது உண்டு.

?எதை செய்யச் சொன்னாலும் இது உன்னால் முடியாது என்று சொல்வது சரியா?
– க.தரன், அருப்புக்கோட்டை.

தவறு. அப்படிச் சொல்லி குழந்தைகளை வளர்க்க கூடாது. எனவே, “உன்னால் முடியாது” என்று சொல்லாதீர்கள். ஒரு உதாரணம். ஆசிரியர் ஒரு பாடத்தை இது யாராலும் செய்ய முடியாது என்று கரும் பலகையில் எழுதி விட்டுச் சென்று விட்டார். தாமதமாக வந்த மாணவன், அது ஏதோ வீட்டுப் பாடம் என்று நினைத்து, அடுத்த நாள் மிகச் சரியாக விடையை கண்டுபிடித்து வந்தான். ஆசிரியர் கேட்டார்.

“இதை எப்படிச் செய்தாய்?’’ என்று. மாணவன் சொன்னான்;“நான் எனது வீட்டுப் பாடம் என்று நினைத்தேன். அது முடியாது என்று நீங்கள் சொன்னது எனக்குத் தெரியாது’’ முடியாது என்று மண்டையினுள் ஏற்றப்படாததால், முடிந்தது. இதை நினைவில் கொண்டு பிள்ளைகளை வளருங்கள்.

?பெரும்பாலான பிரச்னைகள் எதனால் தோன்றுகின்றன?
– ரங்கபிரியா, பழனி.

வாயால்தான். வாயால் இரண்டு வேலைகளைச் செய்கிறோம். ஒன்று சாப்பிடுகிறோம். இன்னொன்று பேசுகிறோம். தவறான உணவை சாப்பிட்டால், உடல் கெடுகிறது. தவறான வார்த்தை பேசிவிட்டால் விவகாரமாகி, எல்லாம் கெடுகிறது. இரண்டிலும் கவனம் தேவை. முக்கியமாக பேசும் போது, கவனம் தேவை. உங்கள் வார்த்தைகளில் ஜாக்கிரதையாக இருங்கள். தவறாக பேசிவிட்டால், நீங்கள் மன்னிக்கப்படலாம். ஆனால், உங்கள் வார்த்தைகள் மறக்கப்படாது.

?ஒரே நேரத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்குத் திருமணத்தைச் செய்யலாமா?
– ராஜேந்திரபிரசாத், தொட்டியம் – திருச்சி.

பெரும்பாலும் அப்படி யாரும் செய்வதில்லை. சில நேரங்களில் செலவைக் குறைப்பதற்காக அபூர்வமாக செய்வதுண்டு. ஆனால், இது குறித்து தர்மசாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

1. ஒரு வயிற்றில் பிறந்த இரண்டு பிள்ளைகளுக்கு ஒரே வருடத்தில் திருமணம் செய்யக் கூடாது. அதுபோலவே, பெண்களுக்கும் பொருந்தும்.

2. இரண்டு சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்யக் கூடாது. அவசியமானால் ஆறு மாதங்களுக்குப் பிறகும், வருடம் மாறினால் உதாரணமாக பிரபவ வருடம் விபவ வருடம் என்று மாறினால், மூன்று மாதங்களுக்கு பின்னரும் செய்யலாம்.

3. இரட்டை பிள்ளைகளானால், ஒரே சமயத்தில் செய்யலாம் என்று சொல்கிறார்கள். இதை அந்தந்த குடும்பப் பெரியோர்கள், குருமார்கள் என இவர்களிடம் கேட்டு விளக்கங்களைப் பெறலாம். இது பொதுவான சாஸ்திரம்.

4. மூத்த பிள்ளைக்கு ஆனி மாதத்திலும், அவன் பிறந்த மாதத்திலும் திருமணம் செய்ய மாட்டார்கள்.

5. பொதுவாக பிறந்த திதி, பிறந்த நட்சத்திரம், பிறந்த மாதம், இதில் திருமணம் செய்வது இல்லை.

?ஆன்மிகத்தின் நிறைவு நிலை என்ன?
– கிருஷ்ணதாசன், முசிறி.

மௌனம்தான். மௌனம் என்பது சாதாரணமானதல்ல. பேச்சு பயனற்ற போது மௌனம் பயன் அளிக்கும். அம்மா தன் பையனிடம் சொல்லிப் பார்க்கிறார். பையன் கேட்கவில்லை. ஒருநாள் பேசாமல் இருந்தாள். பையன் “என்னம்மா, பேச மாட்டியா? நீ சொல்றத நான் கேட்கிறேன். பேசும்மா..’’ என்று அம்மாவிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான். பேச்சு பலன் தராதபோது, மௌனம் பலன் தந்தது. இது ஆன்மிகத்துக்கும் பொருந்தும். அதனால்தான் அருணகிரிநாதர். “சும்மா இரு சொல்லற’’ என்று அநுபூதி நிலையில் பாடினார். சொல்லிய வார்த்தைக்கு விலை உண்டு. சொல்லாத வார்த்தைக்கு விலை இல்லை.

?நமது துன்பத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?
– வெங்கடேஷ், புதுச்சேரி.

இதற்கு விவேகானந்தர் ஒரு அற்புதமான பதிலைச் சொல்லுகின்றார். நமக்கு வருகின்ற துன்பங்கள் நம்முடைய தீவிரமான பந்தங்களில் இருந்து நமக்கு வைராக்கியத்தைக் கொடுத்து, பந்தத்திலிருந்து விடுவிப்பதற்காக வருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு ஒரு கதையும் அவர் சொல்லுகின்றார். நீங்கள் போய்க் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பின்னால் ஒருவன் அடிக்கிறான். அப்போது கோபமாக “யாரடா அடிப்பது?’’ என்று கேட்பீர்கள். பின்னால் திரும்பிப்பார்த்தால் 20 வருடங்களுக்கு முன் நெருக்கமாக பழகிய நண்பன் என்று தெரிந்ததும், அடித்த அடி அடியாகத்தோன்றாது, ஆனந்தமாக மாறும். வலி என்னவோ கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதை பொறுத்துக் கொண்டு சிரிப்பீர்கள்.

அது போல், கடவுள் நம்மை அடித்தால் நமது நிரந்தர தெய்வீக சினேகிதன் அடிக்கிறார் என்று புரிந்து கொண்டு, ஆனந்தப்படுங்கள். கடவுள் நம்மை அடிப்பது உலக பற்றிலிருந்தும், பந்தங்களிலிருந்தும் விடுவித்து, மரணம் இல்லாத பெருநிலையாகிய முக்தியை அளிப்பதற்குத்தான் என்று புரிந்து கொள்ளுங்கள் என்பார். இது அனுபவத்தில் பழகுவது கடினம். காரணம், நாம் உலக மாயையில், உடல் சுகத்தையே பெரிதாக நினைக்கின்ற பொழுது, வலிகளைத் தாங்குகின்ற மனப்பக்குவம் இல்லை. ஆனால், ஆன்மிகத்தில் இதை பழகிவிட்டால்,
எப்பொழுதும் ஆனந்தம்தான்.

?ஏன் இப்பொழுது குற்றங்கள் அதிகமாகிவிட்டன?
– கு.ராமசாமி, கரூர்.

ஒரே விஷயம்தான். ஆத்மார்த்தமான அன்பு குறைந்துவிட்டது. எந்த இடத்திலே அன்புக்கு பஞ்சம் வந்துவிடுமோ அந்த இடத்திலே குற்றங்கள் பெரிதாக தோன்றும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்பொழுது நடக்கக்கூடிய குற்றங்களின் பின்னணியைப் பாருங்கள். ஏன் அவன் அந்தக் குற்றத்தைச் செய்தான் என்று ஆராயுங்கள். அங்கே தெரியும் மேலே சொன்ன உண்மைகள்.

?ஆன்மிகத்தின் மூலம் எதை மிக முக்கியமாக அடைய வேண்டும்? மோட்சமா?
– ஆர்.கோபால்தாஸ், சென்னை.

மோட்சம் அடைகிறோமோ இல்லையோ, ஆன்மிகத்தின் அடிப்படையான ஒரு விஷயத்தைப் பெறவேண்டும். கல்வியின் பயன், அன்பும் அறமும்தான். பிறர் மீது அன்பும் மனிதாபிமானமும் பெறுவதற்காகத்தான் நாம் படிக்கிறோம், உழைக்கிறோம், வாழ்கிறோம், ஏன் கடவுளை வணங்குவதும் அதற்காகத்தான்.

“கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.’’
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை ரெவெரென்ட் மார்ட் என்பவர் காந்தியடிகளிடம் ஒரு கேள்வி கேட்டார்;
``எது உங்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது?’’ அதற்கு காந்தியடிகள் பதில் சொன்னார்;
படித்தவர்களின் இதயமற்ற தன்மைதான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது’’
யோசித்துப் பாருங்கள். இன்றைய நிலை எப்படி இருக்கிறது?

?எப்பொழுது அமைதியும் நிம்மதியும் காணாமல் போகும்?
– வித்யாபதி, ஸ்ரீரங்கம்.

நம்முடைய தேவையும், ஆசையும், தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருந்தால், நிம்மதியும் அமைதியும் நிச்சயம் காணாமல் போய்விடும்.

?வயதானவர்கள் அமைதியாக வாழ என்ன வழி?
– ஆர்.ரகுவரன், ஆவடி.

பொதுவாக வயது என்பது ஒருவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தளர வைத்துவிடும். வயது ஆகஆக வாழ்வில் விரக்தி ஏற்படவே செய்யும். அவர்கள் சந்திக்கும் பல பிரச்னைகள், இழப்புக்கள், அவர்களை நிலைகுறையச் செய்யும். இதற்கு ஒரே மாற்று ஆன்மிகம்தான். கூட்டு வழிபாடு, சத்சங்கம், பிடித்த கோயிலுக்கு சென்று வழிபடுவது போன்ற செயல்களே இதற்கு மருந்து.

?நிலையாமையை இவ்வளவு தீவிரமாக ஆன்மிகவாதிகள் எதற்கு வலியுறுத்த வேண்டும்? பட்டினத்தார், திருமூலர், அருணகிரிநாதர், ஆழ்வார்கள், என எந்த பாட்டிலும் இந்த விஷயம்தான் தீவிரமாகி இருக்கிறது?
– சி.சுபா சந்திரசேகர்.

திருக்குறளை விட்டுவிட்டீர்களே.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
– என்கிறாரே.

நிலையாமையை வலியுறுத்துவது நம்மை பயமுறுத்த அல்ல. நம்மை
வழிநடத்த. நிலையாமையை புரிந்து கொண்டால்தான், நிலைத்த வாழ்வைக் குறித்து சிந்திக்க முடியும்.

“ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்,
கூடும் வரை கூட்டம், கொள்ளி வரை வருமா?”
– என்பது வேதாந்தமல்ல. விவேகம்.

செஸ் விளையாட்டு பார்த்திருப்பீர்கள். ராஜா, ராணி, சிப்பாய்கள் இருப்பார்கள். விளையாடும் போது, அவரவர்களுக்கு முக்கியம் உண்டு. ஆட்டம் முடிந்தால், எல்லாம் ஒரு பெட்டிக்குள்தான் அடக்கம். இதைப் புரிந்து கொண்டால், வாழ்வின் எல்லை களைப் புரிந்து கொண்டு, யாரிடமும் பகை இல்லாது, போட்டி பொறாமை அசூயை இல்லாது நிம்மதியாக வாழ முடியும்.

?தினமும் ஸ்ரீராமனைக் குறித்து பாராயணம் செய்ய ஒரு எளிமையான ஸ்லோகம் சொல்ல முடியுமா?
– பாலாஜி, புரசைவாக்கம் – சென்னை.

அற்புதச் ஸ்லோகம் ஒன்று உண்டு.
“ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:’’
இது மிகவும் பிரஸித்தமான ஸ்லோகம். பதபிரயோகங்களில் இருக்கும் உள் அர்த்தம் மனதைத் தொடுவதாகும். ஸ்ரீராமச்சந்திரனை தசரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தாயான கௌசல்யா, மகனை ராமபத்ர என்று அழைத்து வந்தாள். இது தாயின் வாத்ஸல்யம் நிரம்பியதாக உள்ளது. கைகேயி ராமச்சந்த்ர என்று அழைப்பாள். குழந்தையாக இருந்தபோது ஸ்ரீராமன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது கைகேயி ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து, சமாதானப் படுத்துகிறாள்.

இந்த காரணத்தினால் ராமச்சந்த்ர என்ற பெயர் பொருத்தமாக உள்ளது. பிரம்ம ரிஷிகளான வசிஷ்டர், ஸ்ரீராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று அழைத்தார். அயோத்யா நகரத்து பிரஜைகள் எல்லோரும் எங்களுடைய ரகுவம்சத்து அரசன் என்ற அர்த்தத்தில் ரகுநாத என்று அழைத்து வந்தனர் சீதாதேவி “நாத” என்றே அழைத்து வந்தாள். அப்படி அழைப்பதற்கு சீதாதேவிக்கு மட்டுமே உரிமை உண்டு. மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது சீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் “ஸீதாய பதயே’’ என்றுகூறி வந்தார்கள். அற்புதமான இந்தச் ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள். உங்களுக்கும் அற்புத, பக்தி அனுபவம் கிடைக்கும்.

தேஜஸ்வி

 

The post திருமணத் தடைக்கு அவசியம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தைச் சொல்ல முடியுமா? appeared first on Dinakaran.

Related Stories: