வேலூரில் சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரம்: சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூரில் சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆயுள்தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே வேலூர் சரக டி.ஐ.ஜி. ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல் சிறைக்கும் மாற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, புழல் சிறைக்கு மாற்றப்பட்ட கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர தயாள் உத்தரவிட்டுள்ளார்.

The post வேலூரில் சிறை கைதி தாக்கப்பட்ட விவகாரம்: சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: