வக்பு வாரிய கூட்டுக்குழு விவாதத்தில் ஆவேசம் கண்ணாடி பாட்டிலை உடைத்த திரிணாமுல் எம்பி: ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு

புதுடெல்லி: வக்பு வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில், காரசார விவாதத்தின் போது கண்ணாடி பாட்டிலை உடைத்து ஆத்திரமடைந்து பேசியதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், குழு தலைவரான பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் பங்கு குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பேசிக் கொண்டிருந்த போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி குறுக்கிட்டு பேச அனுமதி கேட்டுள்ளார். இதற்கு பாஜ எம்பி அபிஜித் கங்கோபாத்யாய் எதிர்ப்பு தெரிவித்தார். கல்யாண் பானர்ஜி மீண்டும் மீண்டும் பேச வாய்ப்பு கேட்பதாக குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக, இரு எம்பிக்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசினர்.

இதனால் ஆத்திரமடைந்த கல்யாண் பானர்ஜி தனது மேஜையில் இருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து மேஜையில் அடித்து உடைந்தார். அப்போது, உடைந்த கண்ணாடி துண்டுகள் குத்தி அவரது விரல்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கூட்டத்தில் இருந்து வெளியில் அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கூட்டம் தடைபட்டது. பின்னர், கூட்டம் தொடங்கியதும், கல்யாண் பானர்ஜியை ஒருநாள் சஸ்பெண்ட் செய்ய பாஜ எம்பி நிஷிகாந்த் துபே தீர்மானம் கொண்டு வந்தது.

இதற்கு 9 பேர் ஆதரவாகவும், 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கூட்டம் முடிந்த பின் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேச கல்யாண் பானர்ஜி மறுத்துவிட்டார். அதே சமயம், உடைந்த கண்ணாடி துண்டுகளை அவர் குழு தலைவரை நோக்கி வீச முயன்ற போது விரலில் காயம் ஏற்பட்டதாக பாஜ எம்பிக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வக்பு வாரிய கூட்டுக்குழு விவாதத்தில் ஆவேசம் கண்ணாடி பாட்டிலை உடைத்த திரிணாமுல் எம்பி: ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: