ஹிஸ்புல்லா தலைவர் பதுங்கி இருந்த மருத்துவமனை டாலரும், தங்கமும் குவிந்திருக்கும் பதுங்கு குழிக்குள் இஸ்ரேல் வேட்டை: யாஹ்யா சின்வாரின் உடலை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க மறுப்பு

பெய்ரூட்: மில்லியன் கணக்கான டாலரும், தங்கமும் குவிக்கப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழிக்குள் இஸ்ரேல் தனது வேட்டையை தொடங்கியுள்ளது. மேலும் படுகொலை செய்யப்பட்ட யாஹ்யா சின்வாரின் உடலை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க மறுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ரேடாரில் இருந்து கடந்த ஓராண்டாக மறைந்திருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 101 பேரை விடுவிப்பதற்காக புதிய திட்டத்தை இஸ்ரேல் தயாரித்துள்ளது. அதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் உடலை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க முடியாது. இவ்விசயத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள 101 பணயக்கைதிகளை விடுவித்தால் தான் யாஹ்யா சின்வாரின் சடலம் அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என்றும், பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவில் ஹமாசுக்கு எதிராக தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ அதிகாரி நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், ‘இன்றிரவு, ஹிஸ்புல்லாக்களின் தலைவன் சையது ஹசன் நஸ்ரல்லாவின் பதுங்கு குழியில் நம்முடைய வேட்டையை தொடங்குகிறோம். ஹிஸ்புல்லாவிடம் மில்லியன் கணக்கான டாலர்கள், தங்கமும் இருக்கும். இவரை தாக்காத ஒரு தளத்தில் நம்முடைய தாக்குதல் இருக்கும். உளவுத்துறை கொடுத்துள்ள தகவலின்படி, அந்த பதுங்கு குழி எங்கே அமைந்துள்ளது? என்றால், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையத்தில் அமைந்துள்ள அல்-சஹேல் மருத்துவமனையின் கீழே உள்ளது. இந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்களது நிதி மையத்தை மருத்துவமனையின் அடியில் மறைத்து வைத்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது. அதனால் லெபனானின் பதுங்கு குழியில் தனது வேட்டையை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஹிஸ்புல்லா தலைவர் பதுங்கி இருந்த மருத்துவமனை டாலரும், தங்கமும் குவிந்திருக்கும் பதுங்கு குழிக்குள் இஸ்ரேல் வேட்டை: யாஹ்யா சின்வாரின் உடலை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: