கோவளம் வரை செல்லும் பேருந்தை வடநெம்மேலி முதலை பண்ணை வரை நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: பாரிமுனை, திருவான்மியூர், தாம்பரத்தில் இருந்து கோவளம் வரை இயங்கும் மாநகர பேருந்துகளை முதலை பண்ணை வரை நீட்டிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலி இசிஆர் சாலையொட்டி முதலைப் பண்ணை உள்ளது. இது, ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலை பண்ணையாக பார்க்கப்படுகிறது.

இங்கு, அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர், நன்னீர் முதலைகள், நீல வாயுடைய முதலைகள், சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள், உப்பு நீரில் வாழும் முதலைகள் உள்ளிட்ட அரியவகை முதலைகள் இங்குள்ள குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அமெசான் மற்றும் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழ்ந்து, மனிதர்களை அப்படியே விழுங்கும் மிகப் பெரிய ராட்சத முதலைகளும் வளர்க்கப்படுகிறது.

இங்கு, ஒரே வளாகத்தில் முதலை பண்ணையும், இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் பாம்பு பண்ணையும் அமைந்துள்ளது. மேலும், இங்குள்ள முதலைகள் மற்றும் விஷத்தன்மை கொண்ட பாம்புகளை கண்டு ரசிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் வருகின்றனர். அப்படி, வருபவர்கள் மீண்டும் வீடு திரும்பி செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் வட நெம்மேலி பேருந்து நிறுத்தத்திலேயே காத்திருக்கின்றனர்.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பாரிமுனை, திருவான்மியூர் மற்றும் தாம்பரம் பகுதியில் இருந்து கோவளம் வரை இயங்கும் பேருந்துகளில், சில பேருந்துகளை மட்டும் சனி- ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வடநெம்மேலி முதலை பண்ணை வரை நீட்டிக்க மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோவளம் வரை செல்லும் பேருந்தை வடநெம்மேலி முதலை பண்ணை வரை நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: