ஈரோடு மழையால் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம் சீரமைப்பு நம்பியூர்-புளியம்பட்டி இடையே போக்குவரத்து துவங்கியது

கோபி, அக்.22: கோபி அருகே உள்ள நம்பியூர் கொட்டக்காட்டுபாளையம் என்ற இடத்தில் கன மழையால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நம்பியூர் – புளியம்பட்டி இடையே போக்குவரத்து சீரானது. கோபி அருகே உள்ள நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் கொட்டக்காட்டு பாளையம் என்ற இடத்தில் தரை மட்ட பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் புளியம்பட்டி அருகே உள்ள மங்கரசு வளையபாளையம், செம்மம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் திடீரென பெய்த கனமழையால் கொட்டக்காட்டுபாளையம் பகுதியில் தற்காலிக பாலம் மட்டுமின்றி பாதியளவு கட்டப்பட்ட பாலம் கட்டுமான பணிகளும், கட்டுமான பொருட்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் நம்பியூரில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் புளியம்பட்டி செல்லும் வாகனங்களை லாகம்பாளையம், வரப்பாளையம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், கொட்டக்காட்டு பாளையத்தில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து நம்பியூர் புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து சீரானது.

The post ஈரோடு மழையால் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம் சீரமைப்பு நம்பியூர்-புளியம்பட்டி இடையே போக்குவரத்து துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: