சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி நடராஜ தீட்சிதர் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள், நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளதாகவும், அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது எனவும் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோயிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்ட் காலம் முடிந்து விட்டது. அவர் தில்லை காளியம்மன் கோயிலில் சேவை செய்து வருவதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை இரு நீதிபதிகள் அமர்வு முடிவுக்கு விட்டு விடுகிறேன் என்று உத்தரவிட்டார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: