தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் ஒரு பவுன் ரூ.58,400 என்ற புதிய உச்சம் தொட்டது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை மேலும் அதிகரித்து சவரன் ரூ.58,400 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கடந்த மார்ச் மாதம் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் பவுன் ரூ.55 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பவுன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை பவுன் ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் என்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 16ம் தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து கடந்த 19ம் தேதி ஒரு பவுன் ரூ.58,240 என்று இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

இப்படியே ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்தால் வெகு விரைவில் பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்து விடுமோ என்ற அச்சம் நகை வாங்குவோர் இடையே ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து 20ம் தேதி (நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்திருந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,300க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,400க்கு விற்கப்பட்டது. வருகிற 31ம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை வருகிறது. தொடர்ந்து முகூர்த்த தினங்களும் அதிக அளவில் வருகிறது.

இந்த நேரத்தில் விலை தினம், தினம் புதிய உச்சத்தை அடைந்து வருவது நகை வாங்க காத்திருப்போரை கலக்கமடைய செய்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.109க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகை மற்றும் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் அதிக அளவில் வருவதாலும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயருகிறது.

The post தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் ஒரு பவுன் ரூ.58,400 என்ற புதிய உச்சம் தொட்டது appeared first on Dinakaran.

Related Stories: