போடி மெட்டு அருகே மலைச்சாலையில் மண் சரிவு: வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றில் இறங்க தடை

போடி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் கற்கள் உருண்டு விழுந்தன. இந்த நிலையில் வாகனங்கள் எச்சரிக்கையாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாலையில் சாரல் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது. குறிப்பாக, போடி அருகே வடக்கு மலை, குரங்கணி, போடிமெட்டு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் போடி மெட்டு மலைச் சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. போடி மெட்டு சாலையில் புலிக்குத்திக்கு மேலே 9, 10, 11ம் கொண்டை ஊசி வளைவுப் பகுதிகளில் கற்கள் மற்றும் மண் சரிந்து விழுந்துள்ளது.

இந்த சாலை தமிழகம் – கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது போக்குவரத்தில் பாதிப்பில்லை. வாகனங்கள் தொடர்ந்து சென்று வருகின்றன. இருப்பினும் முந்தல் மலை அடிவாரத்தில், மலைச் சாலையில் செல்லும் வாகன டிரைவர்களிடம் கவனமாக வாகனத்தை இயக்குமாறு போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர். மேலும் குரங்கணி மலைப் பகுதிக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்களையும் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நேற்றைய கனமழையால் போடி கொட்டக்குடி ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றுப் பகுதியிலும், மூக்கரை பிள்ளையார் தடுப்பணை பகுதிகளிலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post போடி மெட்டு அருகே மலைச்சாலையில் மண் சரிவு: வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றில் இறங்க தடை appeared first on Dinakaran.

Related Stories: