வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

வால்பாறை: வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மதியம் 2 மணி நேரம் திடீரென கன மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது. சந்தை நாளான நேற்று (ஞாயிறு) கனமழை பெய்ததால் சாலையோர தீபாவளி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையால் வால்பாறை பூங்கா அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வால்பாறை வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே இருந்த கடைகளில் தஞ்சம் புகுந்தனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் சற்று மழை குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து மீண்டும் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று அதிகாலை கனமழையாக பெய்தது. மழையால் கடும் குளிர் மற்றும் மூடுபனி நிலவி வருகிறது. மழை காரணமாக அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இன்று காலை 6 மணி நிலவரப்படி சின்கோனா 44, சின்னகல்லார் 68, வால்பாறை தாலுகா அலுவலகம் 65, சோலையார் அணை 13 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

The post வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: