ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. அக்.25-ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். 23ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று அந்தமான் கடல் பகுதிகள், மத்தியமேற்கு, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
இன்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: