இந்தியை யாரும் திணிக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றே சொல்கிறோம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: இந்தியை யாரும் திணிக்கவில்லை, கட்டாயமும் படுத்தவில்லை. விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் பாஜ அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆயுத பூஜை விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றி இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு 60 ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டி: தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு உள்ளனர். அதற்காக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். யாரும் இந்தியை திணிக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை.

விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த திருமாவளவன் எப்படி மொத்த தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? அவர் இரட்டை வேடம் போடுகிறார். விசிக என்பது ஒரு சின்ன கட்சி, அதனை நான் சிறிய கட்சியாகத் தான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியை யாரும் திணிக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றே சொல்கிறோம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: