×
Saravana Stores

தொடர் கதையான அச்சுறுத்தல் ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்: பயணிகள் பீதி

புதுடெல்லி: இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். நேற்று முன்தினம் விஸ்தாரா நிறுவனத்தை சேர்ந்த 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுவும் புரளி என தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல் வந்தது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர் மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் மும்பையிலிருந்து இஸ்தான்புல்லுக்கு சென்ற இண்டிகோ விமானம் மற்றும் உதய்பூரில் இருந்து மும்பை சென்ற விஸ்தாரா போன்ற விமானங்களும் இதில் அடங்கும்.

விஸ்தாராவின் சிங்கப்பூர்-மும்பை விமானத்திற்கும், மும்பை, டெல்லியில் இருந்து சிங்கப்பூர், பிராங்க்பர்ட், பாங்காக், கொழும்பு சென்ற விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. ஜோத்பூரிலிருந்து டெல்லிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை நடத்தியதாக விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வந்த மிரட்டல்கள் அனைத்து புரளியாக இருந்தாலும், இந்த மிரட்டல்கள் விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது இந்திய விமான நிறுவனங்களை பொருளாதார ரீதியாக சீர்குலைக்கும் சதியா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

* டிஜிசிஏ தலைவர் அதிரடி மாற்றம்
விமான நிறுவனங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) டைரக்டர் ஜெனரல் விக்ரம் தேவ் தத், நிலக்கரி அமைச்சக செயலாளராக நேற்று மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டெல்லி விமானம் ஜெர்மனியில் தரையிறக்கம்
டெல்லியில் இருந்து சென்ற 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் ஒரு விமானம் ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு இயக்கப்படும் விஸ்தாரா விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெர்மன் நாட்டின் பிராங்பர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது. தேவையான சோதனைகளை முடிந்த பின்னர் விமானம் லண்டனில் தரையிறங்கியது

The post தொடர் கதையான அச்சுறுத்தல் ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்: பயணிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து...