×
Saravana Stores

அமைச்சர்கள் குழு பரிந்துரை முதியோர் மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு: சைக்கிள், நோட்டு புத்தக வரி வரம்பில் மாற்றம்?

புதுடெல்லி: முதியோர்களுக்கான மருத்துவ காப்பீட்டிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மாநில அமைச்சர்கள் குழுவில் பலரும் பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக அறிக்கை தர பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் மாநில அமைச்சர்கள் கொண்ட 13 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்குழு இம்மாத இறுதியில் அறிக்கை தர உள்ளது. இந்நிலையில், அமைச்சர்கள் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், முதியோர்களுக்கான மருத்துவ காப்பீட்டிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பெரும்பாலான குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதே சமயம், ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட மருத்துவ காப்பீடுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி தொடர வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த குழு தலைவர் சம்ராட் சவுத்ரி, ‘‘மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென அனைத்து குழு உறுப்பினர்களும் விரும்புகின்றனர். குறிப்பாக முதியோருக்கு சிறப்பு கவனம் செலுத்த பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக இறுதி அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலில் தாக்கல் செய்யும் முன்பாக நாங்கள் மீண்டும் ஆலோசனை நடத்துவோம்’’ என்றார்.

இதே போல, ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பான அமைச்சர்கள் குழுவும் நேற்று ஆலோசனை நடத்தியது. இதில், 20 லிட்டர் குடிநீர் கேன்களுக்கான ஜிஎஸ்டி 18ல் இருந்து 5 சதவீதமாகவும், சைக்கிள், நோட்டு புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஷூ மற்றும் ரூ.25,000க்கு மேற்பட்ட வாட்ச்களுக்கான ஜிஎஸ்டி 18ல் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து அடுத்த மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

The post அமைச்சர்கள் குழு பரிந்துரை முதியோர் மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு: சைக்கிள், நோட்டு புத்தக வரி வரம்பில் மாற்றம்? appeared first on Dinakaran.

Tags : Council of Ministers ,NEW DELHI ,India ,Dinakaran ,
× RELATED 40 வயதை தாண்டியவர்கள் உஷார் மார்பக...