துபாய் விமானத்துக்கு வந்த சோதனை 3.30 மணி நேரம் காத்து அடிச்சும் ஏறல: இரவு வரை தவியாய் தவித்த பயணிகள்

அவனியாபுரம்: மதுரையில் இருந்து துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் ஒரு டயரில் மூன்று மணி நேரம் காத்து அடிச்சும் ஏறாததால் பயணிகள் தவியாய் தவித்தனர். மதுரையில் இருந்து துபாய்க்கு தனியார் விமான நிறுவனம் தினசரி சேவை வழங்கி வருகிறது. துபாயிலிருந்து 181 பயணிகளுடன் நேற்று காலை 11.10 மணியளவில் அந்த விமானம் மதுரை விமான நிலையம் வந்தது. பின்னர் மதுரையிலிருந்து துபாய்க்கு 176 பயணிகளுடன் பகல் 12.20 மணியளவில் புறப்படத்தயாரானது.

அப்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் சோதனை செய்த போது, விமான சக்கரத்தில் உள்ள ஒரு டயரில் காற்று மிக குறைந்த அளவில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இயந்திரங்கள் மூலம் காற்று செலுத்தப்பட்டதில் காற்று நிரம்பவில்லை. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக முயற்சி செய்தும், சரி செய்ய முடியாததால் மாற்று சக்கரம் ஏற்பாடு செய்யப்பட்டு மாற்றப்பட்டது.

இதனால் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு விமான நிலைய வளாகத்தில் காத்திருக்க வைக்கப்பட்டனர். டயர் மாற்றப்பட்டு மூன்றரை மணி நேர தாமதத்திற்கு பின்னர், விமானம் துபாய்க்கு புறப்பட தயாரானது. இறுதியில் டயரை செக் செய்தபோது மேலும் காற்றழுத்தம் குறைவாக இருந்தது. எனவே புதிய டயர் வந்த பிறகே பொருத்தி விமானம் கிளம்பும் நிலை ஏற்பட்டது. இதனால் நேற்றிரவு வரை விமான நிலைய பகுதியில் விமானம் டயரை எதிர்பார்த்து காத்திருந்தது. இதனால் பரபரப்பு நிலவியது.

The post துபாய் விமானத்துக்கு வந்த சோதனை 3.30 மணி நேரம் காத்து அடிச்சும் ஏறல: இரவு வரை தவியாய் தவித்த பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: