×
Saravana Stores

தாய் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கேட்டு சென்டாக் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 1964ம் ஆண்டுக்கு முன் தந்தை குடியிருந்த ஆவணங்கள் இருந்தால் மட்டும், பூர்வீக ஆதிதிராவிடர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், தாய், தந்தை என்று பிரித்து பார்த்து சான்றிதழ்கள் வழங்க கூடாது. தாய், தந்தை இருவரில் யாருக்கு 1964ம் ஆண்டுக்கு முன் புதுச்சேரியில் குடியிருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தாலும், அவர்களின் அடிப்படையில் பூர்வீக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ்கள் வழங்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தாய் பூர்வீகத்தின் அடிப்படையில் ஸ்ரீநிஜா என்ற மாணவிக்கு பூர்வீக ஆதிதிராவிடர் சான்றிதழை வருவாய்த்துறை வழங்கியுள்ளது. இந்த மாணவி நீட் தேர்வில் 385 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஆனால், இவரை விட குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாணவி நிஜாவுக்கு சென்டாக் மூலம் நடைபெறும் மருத்துவ படிப்புக்கான 3ம் கட்ட கலந்தாய்வில் எஸ்சி இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்ைக வைக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருப்பதால், மாணவி தரப்பு கோரிக்கையை சென்டாக் நிர்வாகம் ஏற்கவில்லை. இதனை கண்டித்தும், மாணவி நிஜாவுக்கு எம்பிபிஎஸ் சீட் ஒதுக்க கோரியும் சமூக அமைப்புகள் சார்பில் நேற்று சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மாணவியுடன் சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, முற்போக்கு மாணவர் கழக தலைவர் தமிழ்வாணன், ஏப்ரல் 14 இயக்க தலைவர் நித்தியானந்தம், இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட பட்டியலின இயக்க தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சென்டாக் கன்வீனர் ஷெரில் ஆன் சிவம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை மாணவி ஸ்ரீநிஜாவுக்காக ஒரு எம்பிபிஎஸ் இடத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் சென்டாக் கலந்தாய்வை 23ம் தேதிக்கு மேல் நடத்த வேண்டும் என்று மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். அதற்கு சென்டாக் கன்வீனர், இதுதொடர்பாக கல்வித்துறை செயலர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அவரிடம் முறையிடுங்கள் என்று கூறினார். இதையடுத்து, அவர்கள் தலைமை செயலகத்தில் கல்வித்துறை செயலர் ஜவகரை சந்தித்து முறையிட்டனர். அப்போது, இக்கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக கல்வித்துறை செயலர் தெரிவித்தார்.

The post தாய் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கேட்டு சென்டாக் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : SENDAK ,MBBS ,Puducherry ,Adhi Dravidians ,Madras High Court ,
× RELATED எம்பிபிஎஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கோரிய மனு தள்ளுபடி