×
Saravana Stores

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை: ரயில்வே போலீசார் தீவிரம்

சென்னை: கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, 40க்கும் மேற்பட்ட காயலான் கடை உரிமையாளர்களிடம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11ம் தேதி இயக்கப்பட்ட பாக்மதி விரைவு ரயில் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டையில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 40 ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில், சம்பவ இடத்தில் உள்ள தண்டவாளத்தில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் லூப் பாதையில் சென்று விபத்துக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரயில் விபத்து திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் இதுவரை ரயில்வே ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் என 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாகமதி விரைவு ரயிலுக்கு முன்பாக சூலூர்பேட்டை வரை செல்லும் பயணிகள் ரயில் மூன்று நிமிடத்திற்கு முன்பு சென்றுள்ளது. மூன்று நிமிட இடைவெளிக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை சுழற்ற முடியுமா என சோதனை செய்து பார்க்கப்பட்டது. தண்டவாள பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றவர்கள் மூலம் போல்ட், நட்டுகளை கழற்றி பார்த்தபோது 11 நிமிடங்களானது. சூளூர்பேட்டை ரயில் சென்ற பிறகு மூன்று நிமிட இடைவெளிக்குள் போல்ட் நட்டுகளை முழுமையாக கழற்றி இருக்க வாய்ப்பில்லை.

மற்றொரு கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறு சிறுப் பகுதியாக கழற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சூளூர்பேட்டை ரயில் கடந்ததும் முழுமையாக கழற்றி விடும்போது தான் பாகமதி ரயில் விபத்தில் சிக்கி உள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது. தண்டவாளத்தின் போல்ட், நட்டுகளை முழுமையாக கழற்றிய பிறகுதான் பச்சையிலிருந்து சிக்னல் சிவப்புக்கு மாறுகிறது. ஒரு பகுதி போல்டை நட்டை கழற்றும் பொழுது சிக்னல் மாறும் தொழில்நுட்பம் இல்லை என்பது ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. கவரப்பேட்டை விபத்துக்கு முன்பு பொன்னேரியில் 3 முறை தண்டவாளத்தின் பாகங்கள் கழன்று கிடந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே ஊழியர்களில் யாரோ ஒருவரோ, முன்னாள் ஊழியரோ, துறையில் பயிற்சிபெற்ற நபர்களோ செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தண்டவாள போல்டுகளை திருடுகள் திருடி இருக்கலாம் என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 40 பழைய இரும்பு கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை: ரயில்வே போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kayalan ,Kawarappettai train accident ,Chennai ,Bakhmati ,Train ,Mysore ,Bihar State Darbhanga ,Bonneri ,Railway Police ,Dinakaran ,
× RELATED கவரப்பேட்டை ரயில் விபத்து; ஒன்றிய...