அனுமதியின்றி இருப்பு வைத்திருந்த ரூ30 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: லாரி ஷெட்டுக்கு சீல்


சிவகாசி: சிவகாசியில் அனுமதியின்றி லாரி ஷெட்டில் இருப்பு வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அந்த ஷெட்டுக்கு சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்துகள் நிகழாமல் தடுக்க பட்டாசு கடைகள், குடோன்களை கண்காணிக்க காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய 14 குழுக்களை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நியமித்துள்ளார். இந்த குழுக்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு இருப்பு வைக்கும் குடோன்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி டவுன் பகுதியில் வேலாயுதரஸ்தா சாலையில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் இருப்பு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சிவகாசி டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று இரவு அந்த ஷெட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அனுமதியின்றி ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், லாரி ஷெட் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த கூடலிங்கம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த அந்த ஷெட்டில், பாதுகாப்பு வசதி இல்லாமல் பட்டாசுகள் இருப்பு வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி ஷெட்டுக்கு சீல் வைத்தனர்.

The post அனுமதியின்றி இருப்பு வைத்திருந்த ரூ30 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: லாரி ஷெட்டுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: