×
Saravana Stores

மஹா பத்மாடவி ஸம்ஸ்தா

மஹாபத்மாடவிக்கு எப்பேற்பட்ட அழகான வர்ணனையை துர்வாசர் அளிக்கிறார், பாருங்கள். பெரிய தாமரையால் ஆன ஒரு காடு. மஹா பத்மாடவி. இப்போது நாம் இங்கு சொன்னது ஒரு தாமரைக்குரிய வர்ணனை. இதுபோன்று லட்சக்கணக்கான தாமரைகள் பூத்திருந்தது என்றால் அந்த இடம் எப்படி இருக்கும்.அப்போது அந்த இடம் ஒரு காடு மாதிரிதானே இருக்கும். லட்சக் கணக்கான கோடிக்கணக்கான தாமரைகள் பூத்திருந்தது எனில், அது காடு மாதிரி இருக்கும். அந்த காடுபோன்று இருக்கக் கூடிய பகுதிக்குத்தான் மகாபத்மாடவி என்று பெயர். இங்கு அம்பாளினுடைய விசேஷமான ஒரு ஸ்தானம் இருக்கிறது. அம்பிகையானவள் பஞ்ச பிரஹ்மாஸனத்தில் பிந்து ஸ்தானத்தில் இருந்தால் கூட, இந்த மஹா பத்மாடவி என்பது அம்பிகையினுடைய ஒரு விசேஷமான ஸ்தானமும் ஆகும். பொதுவாக நாம் ஒரு விஷயத்தை உதாரணத்திற்கு பார்ப்போம். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கூட நாம் ஏன் வேத்ரத்தை வைத்திருக்கிறோம். இங்கு தலம் என்பதும் அங்கு ஒரு கோயில் என்பதும் ஒரு விசேஷமான ஸ்தானமாகும். அதுபோலவே இந்த மஹாபத்மாடவி என்பதும் விசேஷமான ஸ்தானமாகும். மேலே குறிப்பிட்டபடி நாம் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு அந்த தாமரை மலர்களின் பிரமாண்டமும் அது அப்படியே காடு முழுவதுப் பரவியிருப்பதும் என்பது நம் நினைப்பிற்கு அப்பாற்பட்ட மனதால் கிரஹிக்க முடியாத விஷயமாகும்.

இந்த மஹாபத்மாடவி என்கிற அம்பிகையின் ஸ்தானம் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கின்றது என்று பார்ப்போம் வாருங்கள். மஹா பத்மாடவி ஸம்ஸ்தா… என்றால் மஹா பத்மாடவியில் வசிப்பவள். மஹா பத்மாடவியில் இருப்பவள். அதில் விளங்குபவள் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். மேலேயுள்ள அனைத்து விளக்கங்களையும் பார்த்து ஓரளவிற்கு மனதால் கிரகித்துக் கொண்டால், இந்த நாமாவானது நமக்கு உள்ளூற அந்தர்கதமாக அல்லது உள்ளர்த்தமாக எதைக் காண்பித்துக் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும். ஒரு சில நாமங்களை நாம் யோக மார்க்கமாக பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த நாமம் என்பது யோகரீதியில் யோக மார்க்கத்தில் சென்று புரிந்து கொள்ள வேண்டிய நாமமாகும். என்ன யோக மார்க்கம் எனில், நம்முடைய சஹஸ்ராரம் என்று சொல்லப்படுகின்ற, அதாவது நம்முடைய குண்டலினீ சக்தியாக மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு சக்கரங்களாக வந்து, உச்சியில் இருக்கக்கூடிய சஹஸ்ரார பத்மத்திற்கு கீழே இருக்கக் கூடிய சஹஸ்ரார பத்மத்தின் இதழ்கள் விரிந்திருக்கக் கூடிய இடம் இருக்கிறதல்லவா… அந்த இடத்திற்கு பிரம்மரந்திரம் என்று பெயர். அதாவது ஆக்ஞா சக்கரம் என்று சொல்லக் கூடிய புருவமத்திக்கும் சகஸ்ராரம் என்று சொல்லக் கூடிய உச்சந்தலைக்கும் நடுவில் இருக்கக்கூடிய இந்தப் பகுதிக்கும் பிரம்மரந்திரம் என்று பெயர். இந்த பிரம்மரந்திரப் பகுதிதான் நாம் இப்போது பார்க்கக்கூடிய மஹாபத்மாடவி என்பதாகும்.

இப்போது இங்கு இன்னொரு விஷயத்தையும் சேர்த்துப் பார்ப்போம். குண்டலீனி சக்கரத்தில் ஒவ்வொன்றாக வரும்போது இரண்டு புருவ மத்திக்கும் இடையேயுள்ள இடத்திற்கு ஆக்ஞா சக்கரம் என்பதாகும். அப்படியே சஹஸ்ராரம் என்கிற உச்சந்தலைக்கும் இடையிலே உள்ள இடம்தான் இந்த பிரம்மரந்திரம். இப்போது நம்முடைய உடலில் சூட்சும உறைகின்ற இந்த சக்கர ஸ்தான இடங்களை அப்படியே நகரத்தின் வைத்தால், சிந்தாமணி என்கிற சஹஸ்ராரத்திற்கும் சிருங்கார கோட்டையான புருவமத்திக்கும் நடுவேதான் இந்த மஹாபத்மாடவி இருக்கிறது. அப்போது நம்முடைய ஆக்ஞா சக்கரமான புருவ மத்திக்கும் உச்சந்தலை என்று சொல்லக்கூடிய சஹஸ்ராராத்திற்கும் நடுவில் எப்படி பிரம்மரந்திரம் இருக்கோ, அந்த சஹஸ்ராரத்தில் எப்படி ஆயிரம் இதழ் தாமரைகள் விரிந்திருக்கிறதோ அதுபோல நகரத்தில் நம்முடைய புருவ மத்தியிலுள்ள ஆக்ஞா சக்கரம் என்பது அங்கு சிருங்கார கோட்டையாகவும், நம்முடைய உச்சந்தலையான சஹஸ்ராரம் என்பது அங்கு சிந்தாமணி கிருஹமாகவும் எடுத்துக் கொண்டால், இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள மஹாபத்மாடவி எது என்றால், நம்முடைய சரீரத்தில் ஆக்ஞா சக்கரத்திற்கும், சஹஸ்ராரத்திற்கும் நடுவே பிரம்மரந்திரப் பகுதி எப்படி இருக்கிறதோ அதுபோல நகரத்திற்குள் மஹாபத்மாடவி இருக்கிறது.இந்த பிரம்மரந்திரத்தில் எப்படி ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரைகள் விரிந்திருக்கிறதோ, அதேபோல அங்கு இருக்கக்கூடிய மஹாபத்மாடவியிலும் ஆயிரக்கணக்கான தாமரைப்பூக்கள் விரிந்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் நாம் சரீரத்தில் சொல்லக் கூடிய இந்த பிரம்மரந்திரப் பகுதி என்பது மஹாபத்மாடவியின் ஒரு மினியேச்சர் என்று வைத்துக் கொள்ளலாம். இந்த சிறிய வடிவத்தை நகரத்தில் பெரிய வடிவமாக கற்பனை செய்தால், அதுதான் துர்வாசர் சொல்லக்கூடிய அந்த வர்ணனை. மீண்டும் மேலே சொன்ன வர்ணனையை இங்கு நினைவிற்கு கொண்டு வாருங்கள்.

மீண்டும் சொல்கிறேன்… நம்முடைய சரீரத்தில் நாம் சொல்லக் கூடிய பிரம்மரந்திரம் என்பது நகரத்தில் நாம் சொல்லக் கூடிய மஹாபத்மாடவி என்று சொல்வதின் மினியேச்சர் ஆகும். இப்போது இந்த பிரம்மரந்திர ஸ்தானத்தில் அம்பிகை இருக்கிறாள். சஹஸ்ராரம் என்கிற உச்சந்தலையில் அம்பிகை பிந்து ஸ்தானத்தில் இருக்கிறாள் எனில், அதற்கடுத்து மஹாபத்மாடவி பிரம்மரந்திரத்தை கடந்து ஆக்ஞா சக்கரம் என்கிற இடத்திற்கு வந்தால், அங்கு அம்பாள் எந்த ரூப நாமத்தோடு விளங்குகிறாள் என்பதை இங்கு நுட்பமாக பார்க்க வேண்டும். மீண்டும் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டுவிட்டு வருவோம். எப்படி பிந்து ஸ்தானத்தில் அம்பிகை லலிதா மகாதிரிபுரசுந்தரியாக இருக்கிறாளோ, அதே அம்பாள்தான் ஆக்ஞா சக்கரத்திற்கு வரும்போது மஹா வாராஹியாக இருக்கிறாள். முன்னால் நாம் ஒரு விஷயம் பார்த்தோம். அதாவது, வெவ்வேறு ஸ்தானங்களில் இருக்கும்போது அம்பாள் வெவ்வேறு ரூபத்தில் இருப்பாள் என்று பார்த்தோம்.

இப்போது பிந்து ஸ்தானத்தில் யார் லலிதா மகா திரிபுரசுந்தரியாக இருக்கிறாளோ… அவளேதான்.. மகா வாராஹியாக இருக்கிறாள். அவளை சேனா நாயிகா.. தண்ட நாதா… என்றெல்லாம் வித்யா சம்பிரதாயம் சொல்கிறது. எனவே, உருவமும் ஸ்தானமும் வேறுவேறாக இருக்கிறதே தவிர எந்த வேறுபாடும் கிடையாது. இந்த மஹா வாராஹியாக இருக்கும்போது அவள் ஆக்ஞா சக்ரத்திலிருக்கிறாள். நகரத்தில் என்னவாக இருக்கிறது என்றும், அப்படியே நம்முடைய சரீரத்தில் அந்த ஸ்தானம் என்னவாக இருக்கிறது என்பதையும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது இந்த சாதகனுக்கு என்னவொரு மாற்றம் Trasnformation நடக்கிறதெனில், அறிவியல் ரீதியாகவும் கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள். நம்முடைய மூளையானது மடிப்பு மடிப்பாக இருக்கக் கூடியது. அதை tissues or muscle என்று எடுத்துக் கொள்வோமாயின், அந்த செதில் செதில்களாக காணப்படும் இந்த மூளை எப்படியிருக்கிறது எனில், அப்படியே இந்த muscles and tissues ஐ மடக்கி மடக்கி மடக்கி பகவான் வைத்திருக்கிறார். இதை அறிவியல் இயற்கை உருவாக்கியிருக்கிறது என்று சொல்லும். நாம் இதை பகவானின் சிருஷ்டி என்று சொல்கிறோம். இப்படி மடக்கி மடக்கி வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மூளையின் செதில் செதிலான மெல்லிய தசையை விரித்தால் அதனுடைய விஸ்தீரணம் என்பது மிகப்பெரிய கால்பந்து மைதானம் அளவிற்கு வரும். விரியும். இப்போது நாம் brain அல்லது மூளை என்று எதைச் சொல்கிறோமோ அதுதான் பிரம்மரந்திரப் பகுதியாகும்.

இந்த இடத்தில் என்ன நடக்கின்றது எனில், இந்த சரீரத்தில் இந்த கர்ம வாசனைக்கு உட்பட்டு, நாம் எதையெல்லாம் வந்து இந்த சரீரத்திற்கும் மனசுக்கும், தேகாபிமானத்திற்கும், மனோ அபிமானத்திற்கும் உட்பட்டு, எதையெல்லாம் சின்னச் சின்னதாக இந்த மூளைக்குள்ளாக பிரம்மரந்திர பகுதியில் வைத்திருக்கிறோம். அது அறிவாக இருக்கலாம். அது emotional ஆக இருக்கலாம். அல்லது intellectual ஆக இருக்கலாம். அது என்னவாக வேண்டுமனாலும் இருக்கலாம். அதையெல்லாம் எப்படி மடக்கி மடக்கி இந்த பிரம்மரந்திரம் என்கிற மூளைக்குள் வைத்திருக்கிறோமோ… அந்த மூளையை விரித்தால் எப்படி கால்பந்தாட்ட மைதானம் என்று அறிவியல் சொல்கிறதோ… அதேமாதிரி இந்த சாதகனுக்குள் எப்படி பெரிய ஒரு அனுபவம் கிடைக்கிறதெனில், இவனுடைய பிரம்மரந்திரனுக்குள் ஆயிரம் இதழ் தாமரைக்குள் இருக்கக்கூடிய இந்த சின்னச்சின்னதாக வைத்திருக்கக்கூடிய எல்லா விஷயங்களும், இவன் இங்கு மஹாபத்மாடவியில் அம்பாளை வந்து தியானம் பண்ணும்போது என்ன ஆகின்றது எனில், இங்கு சுருக்கி சுருக்கி வைக்கப்பட்ட விஷயங்களெல்லாம் வெளியில் விரிக்கப்படுகின்றது. அதனால்தான் துர்வாசர் பத்து பனை அளவுக்கு தாமரை தண்டு இருக்கும். கேசரங்கள் இருக்கும். அது நகரத்தினுடைய வர்ணனை. நாம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடிய பௌதீக தாமரையோடு நகரத்து மஹாபத்மத்தை ஒப்பிடக் கூடாது. அப்போது நகரத்தில் இருக்கக் கூடிய மஹாபத்மத்தை மூலம் நமக்கு காண்பித்துக் கொடுப்பது என்னவெனில், நாம் எதையெல்லாம் சுருங்கி சுருங்கி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே அது அனைத்தும் அங்கு விரிகின்றது. அது விரிந்தால் அதன்
பிரம்மாண்டமே தனியாக இருக்கிறது.

எப்படியெனில், குரு க்ஷேத்ரத்தில் தனக்கு பக்கத்தில் ஒரு நண்பனாக , கோபாலனாக இடையனாக எவன் இருந்தானோ, நண்பனாக யார் நின்று பேசிக் கொண்டிருந்தானோ அடுத்த நிமிஷத்தில் அவன் காண்பித்தது ஒரு பெரிய விஸ்வரூபம். அதேமாதிரி, இங்கே நாம் எதையெல்லாம் இங்கு எல்லைக்குட்பட்டதாக பார்த்துக் கொண்டிருக்கிறோமோ… எவையெல்லாம் நமக்கு சிறிதுசிறிதாக இவ்வளவுதானே என்றெல்லாம் தோன்றுகிறதோ… அதை எல்லாம் உடைத்து அம்பிகையானவள் ஒரு சாதகனுக்கு விஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறான். அந்த சாதகன் அதை தரிசிக்கின்றான். அதைக் காட்டிக் கொடுக்கும்போது அவள் என்ன சொரூபத்தோடு இருக்கிறாள் எனில் அவள் வந்து மகாவாராஹியாக இருக்கிறாள். ஏனெனில், இவ்வாறு சில செயல்களை செய்ய வேண்டுமெனில் மிகமிக அதிக விசையோடுதான் செய்ய வேண்டும். அப்படி இருப்பது வாராஹியே ஆகும். அப்படி மஹாவாராஹியாக இருக்கும்போது என்ன நடக்கிறதெனில், இவனுடைய அகங்காரம் இருக்கிறதோ அந்த அகந்தைதான் எல்லாவற்றையும் இவனை சுருக்கி சுருக்கி இவனை பார்க்க வைக்கின்றது. இப்போது என்ன செய்கிறாள் எனில், மகாவாராஹியாக வந்து அந்த வேர்விட்டு உள்ளே போய் இருக்கிறது. ஒரு பன்றி என்ன செய்யுமெனில், ஒரு நிலத்திற்குள் தோண்டி அந்தக் கிழங்கை அப்படி வெளியே எடுக்குமல்லவா… அதுபோல அம்பிகை மகாவாராஹி என்கிற சொரூபத்தோடு இவனுடைய வாசனை என்கிற அகங்கார கிழங்கை தோண்டி எடுத்து வெளியே போடுகின்றாள். இதைத்தான் குமரகுருபரர் அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் என்று மீனாட்சி பிள்ளைத் தமிழில் பாடுகின்றார்.
(சுழலும்)

The post மஹா பத்மாடவி ஸம்ஸ்தா appeared first on Dinakaran.

Tags : Maha Padmadavi Samstha ,Durvasar ,Mahapadma Devi ,Maha Padma Devi ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்