நியூசி வீரர்களின் வேகத்தில் 46 ரன்னில் சுருண்ட இந்தியா: 5 அதிரடி வீரர்கள் டக்-அவுட்

பெங்களூர்: இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2வது நாள் ஆட்டமும் சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்த உற்சாகத்தை தொடர இந்தியா களமிறங்கியது. அதே நேரத்தில் சமீபத்தில் இலங்கையிடம் ஒயிட் வாஷ் ஆன சோகத்தில் இருந்து மீள நியூசிலாந்தும் பந்து வீசத் தொடங்கியது.

முதல் 5ஓவர்களில் தட்டு தடுமாறி இந்தியா 7ரன் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து 6வது ஓவர் தொடங்கியதும் இந்தியா ஆட்டம் காண ஆரம்பித்தது. நியூசி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க மு டியாமல் 10ரன்னில் 3 விக்கெட் பறி கொடுத்தது.
இந்தியா 12.4ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 13ரன் எடுத்திருந்த போது திடீர் மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்று ஆட்டம் தொடங்கினாலும் இந்தியாவின் விக்கெட் வீழ்ச்சி ஓயவில்லை. அதனால் முதல் இன்னிங்சில் இந்தியா 31.2 ஓவரில் 46ரன்னுக்கு பரிதாபமாக சுருண்டது. இந்திய வீரர்களின் ரிஷப் பன்ட் 20, ஜெய்ஸ்வால் 13 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை கடந்தனர்.

கேப்டன் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் தலா 2ரன் எடுத்தனர். பும்ரா ஒரு ரன் சேர்த்தார். விராத் கோஹ்லி,கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் தலா 6 பந்துகளை சந்தித்தும் சர்பராஸ்கான் 3 பந்துகளை எதிர்கொண்டும், அஸ்வின் ஒரே ஒரு பந்திலும் என 5வீரர்கள் ‘டக் அவுட்’ ஆகினர். சிராஜ் 4ரன்னுடன் களத்தில் இருந்தார். நியூசி தரப்பில் பந்து வீசிய 3 வேகங்களும் சிக்கனமாக பந்து வீசினர். அவர்களில் மாட் ஹென்றி 5, வில்லியம் ரூர்க் 4, டிம் சவுத்தீ ஒரு விக்கெட் அள்ளினர். அதனையடுத்து களமிறங்கிய நியூசி பொறுப்புடன் விளையாடத் தொடங்கியது.

கேப்டன் டாம் லாதம் 15 ரன்னில் ஆட்டமிழந்தாலும் டெவன் கான்வே, வில்லியம் யங் பொறுப்புணர்ந்து விளையாடினர். வில்லியம் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய கான்வே 91ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்து வீச்சில் போல்டானார். தொடர்ந்து 2வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசி 3விக்கெட் இழப்புக்கு 50 ஓவரில் 180 ரன் குவித்து 134ரன் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்திய ‘சுழல்’கள் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்நிலையில் 3வது நாளான இன்று களத்தில் உள்ள நியூசி அணியின் ரச்சின் ரவீந்திரா 22, டாரியல் மிட்செல் 14 ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.

* டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் இந்தியா எடுத்த 3வது குறைந்தபட்ச ரன் என்ற சிறப்பை நேற்றைய 46ரன் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஆஸிக்கு எதிராக 36(அடிலெய்டு, 2020), இங்கிலாந்துக்கு 42(லார்ட்ஸ், 1974) ரன்கள் முதல் 2 இடங்களில் உள்ளன.
* சொந்த மண்ணில் இந்தியா ஒரு இன்னிங்சில் சேர்த்த மிக குறைந்த ரன்னாக இந்த 46ரன் பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு 2021ம் ஆண்டு இதே நியூசிக்கு எதிராக மும்பையில் எடுத்த 62ரன்னே இதுவரை முதல் இடத்தில் இருந்தது.
* சொந்தமண்ணில் 10ரன்னுக்குள் 3 விக்கெட்களை இந்தியா பறிகொடுத்த சம்பவம் 3வது முறையாக நடந்தேறி உள்ளது. இந்த 3 சம்பவங்களும் நியூசிக்கு எதிராக தான் நடந்துள்ளது. இப்படி நியூசிக்கு எதிராக 7ரன்(மொஹாலி, 1999), 2ரன்(அகமதாபாத், 2010), 10ரன்(பெங்களூர்,2024) இந்தியா எடுத்துள்ளது.
* ஒரே இன்னிங்சில் 5, 6 இந்திய வீரர்கள் டக் அவுட் ஆவது இது 6வது முறையாகும். இத்துடன் 2 முறை 6 வீரர்கள், 4 முறை 5 வீரர்களும் டக் அவுட் ஆகி சாதனைப் படைத்துள்ளனர்.
* இந்திய சோகத்துக்கு இடையில் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட் அள்ளிய நியூசி வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை மாட் ஹென்றி(26டெஸ்ட்) பிடித்து சாதனை படைத்துள்ளார்.

The post நியூசி வீரர்களின் வேகத்தில் 46 ரன்னில் சுருண்ட இந்தியா: 5 அதிரடி வீரர்கள் டக்-அவுட் appeared first on Dinakaran.

Related Stories: