×

5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பொன்னேரி, அக். 17: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் 2வது நாளாக 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வந்து எண்ணூர் துறைமுகத்தில் 3ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளனர். காற்றின் வேகம் 60 கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பழவேற்காட்டில் 2வது நாளாக சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடல் வழக்கத்தை விட சற்று கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

The post 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது