சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ரயில்வே ஆறுகண் கல்வெட்டு பகுதியில் உள்ள வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு அரசால் குத்தகைக்கு வழங்கப்பட்ட 160.86 ஏக்கர் நிலம் மீளப்பெறப்பட்டு, அந்த நிலத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் செய்திட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மேலும், கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட நிலத்தில் ஏற்கனவே உள்ள 3 குளங்கள் சென்னை மாநகராட்சியின் மூலமாக ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் மற்றும் புதிதாக 4.24 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் நடைபெற்று வரும் அந்த குளங்களை வெட்டும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, வேளச்சேரி ரயில்வே ஆறுகண் கல்வெட்டு பகுதியில் உள்ள வீராங்கால் ஓடையின் நீரானது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வழியாக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று, பின்னர் கடலுக்கு சென்றடையும்.
வீராங்கல் ஓடை பொதுப்பணித் துறையின் மூலமாக தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். நாராயணபுரம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரிக்கரையினை பலப்படுத்தும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு, அந்த பணிகள் அனைத்தையும் இன்று மாலைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், அசன் மௌலானா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
* ‘தொய்வின்றி களப்பணி தொடர்ந்திடுவோம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரி செய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியை தொடர்ந்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கிண்டி ரேஸ் கிளப் பகுதியில் குளங்கள் வெட்டும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.