10 விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல்: ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை

புதுடெல்லி: கடந்த 2 நாட்களாக ‘விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன’ என செல்போனிலும், இ-மெயிலிலும் அச்சுறுத்தல் விடப்படுவது அதிகரித்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினம் மட்டும் 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், விமான போக்குவரத்து அமைச்சக உயரதிகாரிகள், சி.ஐ.எஸ்.எப். மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மூத்த காவல் அதிகாரிகள் கூறுகையில், ‘விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பல்வேறு கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கப்பட்டுள்ளன.

உள்நாடு மட்டுமின்றி வேறு நாடுகளில் இருந்தும் மிரட்டல்கள் வந்துள்ளன. இவற்றுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது’ என்று கூறினார். இதன்படி, சவுதி அரேபியா-லக்னோ விமானம், டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், மும்பையில் இருந்து நியூயார்க் நகர் நோக்கி புறப்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில், அவை வெவ்வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்து வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால், இன்று ஒன்றிய அரசு முக்கிய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.

The post 10 விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல்: ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: