ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை- பெங்களூரு மார்க்கத்தில் 3 இடங்களில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் கலெக்டர் ஆய்வுக்கு பின் தீவிரமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை என்றால் ரயில் நிலையத்திற்கும் சுற்றுலா தலமான ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கும் பெயர் பெற்றதாக விளங்குகிறது. மிகத்தொன்மையானதாக தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் விளங்குகிறது.
டெல்லியில் இருந்து சென்னை, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, கோவை, கேரளா போன்ற பகுதிகளுக்கும், சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பணிகளின் காரணமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஜோலார்பேட்டை மார்க்கமாக பெங்களூரு செல்லும் தடம் வழியாக குடியானகுப்பம், சோமநாயக்கன்பட்டி, பச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட் பாதைகளை கடந்து செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் 2, 3 ரயில்கள் கடந்து சென்ற பின் 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை காத்திருந்து ரயில்வே கேட்டை கடந்து சென்று வந்தனர். இதனால் காலதாமதத்தால் பல்வேறு தரப்பினரும் ரயில்வே கேட் பகுதியில் காத்திருந்து கடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகி வந்தனர்.
மேலும், குடியானகுப்பம், சோமநாயக்கன்பட்டி, பச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்ல ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்பட்டு பின்னர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு நிதியும், மத்திய அரசின் நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.
மேலும் பணிகள் துவங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணியை துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் உரிய நேரத்திற்கு ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாத நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணியை தீவிரப்படுத்தி பணிகளை முழுவதுமாக விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வப்போது தினகரனில் படத்துடன் விரிவான செய்தி வெளியாகி வந்தது.
தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கண்ட 3 ரயில் நிலையங்களிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியது. பின்னர், முழு வேகம் அடையாத நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய பாலங்கள் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரயில்வே மேம்பால பணிகள் குறித்து கலெக்டர் க.தர்ப்பகராஜ், எம்எல்ஏ க.தேவராஜி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கடந்த வாரம் கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் குடியானகுப்பம், சோமநாயக்கன்பட்டி, பச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் 3 ரயில்வே மேம்பால பணிகளை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, துறை அதிகாரிகள் இடத்தில் பணி விவரங்களை கேட்டறிந்து அனைத்து பணிகளும் துரிதமாக விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது 3 ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரமடைந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த ரயில்வே மேம்பால பணி தற்போது தீவிரமடைந்து வருவதால் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
The post ஜோலார்பேட்டை- பெங்களூரு மார்க்கத்தில் 3 இடங்களில் அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலம் appeared first on Dinakaran.