×

அடக்குமுறைக்கு அஞ்சாத முரசொலி செல்வத்தின் வாழ்க்கை பாதை

கலைஞரின் மருமகனும், முரசொலி மாறனின் தம்பியுமான முரசொலி செல்வம் 1940ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தவர். இவருக்கு, நீதிக்கட்சி முன்னோடி பன்னீர்செல்வத்தின் நினைவாக, பன்னீர்செல்வம் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சூட்டினார். நாளடைவில் இந்த பன்னீர்செல்வம் என்ற பெயர் மறைந்து, முரசொலி செல்வம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. கலைஞரின் மகள் செல்வி பிறந்தபோது, உடன் இருந்த தனது அக்கா சண்முகசுந்தரத்தம்மாளிடம் என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்றபோது, செல்வத்துக்கு ஒரு செல்வி பிறந்திருக்கிறாள் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து தனது அக்கா மகனான செல்வத்துக்கு, தனது மகளை திருமணம் செய்து வைத்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தவர், சென்னை மாநிலக்கல்லூரியில் பிஏ முடித்தார். முரசொலி செல்வம், செல்வி தம்பதிக்கு ஒரு மகள் எழில் அரசி.

கலைஞரின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கலைஞரின் மகள் செல்வியின் கணவர் என்ற குடும்ப உறவின் பின்னணியையும் தாண்டி திமுகவின் அறிவார்ந்த சொத்தாகத் திகழ்ந்தவர் முரசொலி செல்வம். 33 ஆண்டுகளாக பத்திரிகையை நேசித்தார்.முரசொலியில் வரும் பெட்டிச் செய்திகள் அதிகம் கவனம் பெற்றது. அதை முரசொலி மாறன்தான் எழுதி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவற்றை முரசொலி செல்வம் தொடர்ந்து எழுதினார். இதுபோன்ற செய்திகள், திமுகவினர் மட்டுமின்றி பொதுவான வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. 1989 முதல் செல்வம் முரசொலி நாளேட்டைக் கவனித்து வந்தார்.

கடந்த 1991ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அப்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு தொடர்பாக பேரவையில் பேசிய செய்தியை முரசொலியில் பிரசுரித்தார். இதற்காக சட்மன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார் – இதையடுத்து முரசொலி மீதான உரிமை மீறல் பிரச்சினையால் அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உத்தரவின்படி சட்டமன்றத்தில் ஆஜரானார் முரசொலி செல்வம். அவரை விசாரிப்பதற்காகவே சட்டமன்றத்தில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, முரசொலி செல்வத்தின் துணிச்சலைப் பாராட்டி ‘கூண்டு கண்டேன்- குதூகலம் கொண்டேன்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் கலைஞர். சட்டமன்றத்துக்கு செல்வதற்கு முன்னதாக கலைஞரை சந்தித்த முரசொலி செல்வம், நான் பேரவையில், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கட்டுமா என்று கேட்டுள்ளார். அப்போது கலைஞர், இது சட்டமன்றம், நீ எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. உன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால், நீல நிற சட்டைக்குப்பதில் கருப்பு சட்டை அணிந்து செல் என்று கூறியுள்ளார். அதன்படியே அன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து சென்றார்.

அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991 மே 22ம் தேதியன்று நள்ளிரவில், முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. வாகனங்கள், ஆவணங்கள், அச்சுக் காகிதங்கள், அச்சகம் எல்லாம் எரிந்து கருகிய நிலையில், மறுநாளே முரசொலி நாளிதழ் அச்சிடப்பட்டது. அப்போது முரசொலி செல்வம் வைத்த தலைப்பு ‘Murasoli will take it’. இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, முரசொலி செல்வம் மீதுதான். ஆனால் எவ்வளவு வழக்குகள் போட்டாலும் அடக்கு முறைக்கு அஞ்சாமல் துணிச்சலாக பணியாற்றினார்.

* தமிழக சட்டப் பேரவையில் கூண்டில் ஏற்றப்பட்ட முதல் செய்தி ஆசிரியர்
முரசொலி செல்வத்தின் வரலாற்றை திரும்பி பார்த்தால் முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகன். தன்னுடைய சொந்த அக்காள் மகன். அதேநேரத்தில் தன்னுடைய மகள் செல்வியின் கணவர். இதனால் இரு முறையிலும் மருமகன். முரசொலி பத்திரிகைக்கு 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராக இருந்தவர். பல பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். தான் எழுதிய செய்தியை மறுக்காதவர் என்ற பெயரையும் பெற்றவர். தான் எழுதிய செய்திக்கான ‘சோர்ஸ்’ யார் என்பதை சொல்ல முடியாது. அது பத்திரிகை தர்மம் ஆகாது எனக் கடைசி வரை தீர்க்கமாக செயல்பட்டவர்.

குறிப்பாக அவதூறு வழக்கு ஒன்றில் சட்டப் பேரவை கூண்டில் ஏற்றப்பட்டார். தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக அந்த சம்பவம் அமைந்தது. அதற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி. அப்படியான நிகழ்வு அரங்கேறியதே இல்லை எனலாம். முரசொலி செல்வத்தின் கட்டுரைகளில் ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி அவதூறு கருத்துகளை கூறியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அரசின் கொள்கைகள் குறித்தும், சட்டப்பேரவையின் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு முரசொலி கட்டுரைகளையும் சுட்டிக் காட்டினர். இதனை எதிர்த்து அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தொடரலாம்.

ஆனால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூண்டு அமைத்து, சபாநாயகர் முன்னிலையில் முரசொலி செல்வம் ஏற்றப்பட்டார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் அவையில் இருந்தனர். இந்த விசாரணையில் தனக்கு ‘சோர்ஸ்’ சொன்னவர்களை பற்றி கூற மறுத்தார். இது அவரது துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியது. இத்தகைய விசாரணையை நாடு தழுவிய அளவில் பல்வேறு பத்திரிகையாளர்கள் கண்டித்தனர். இந்த சம்பவம் பெரிய அளவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியது. சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி முரசொலி செல்வத்தை கண்டித்தனர். அப்போதும் அவர் எதற்கும் அஞ்சியதில்லை.

* கலைஞரை பிரதிபலிக்க கூடியவராக திகழ்ந்தார் முரசொலி செல்வம்
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவின் இரண்டாம் பகுதியான ‘அதர்வைஸ்’ என்பதை பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு மாநில ஆட்சியைக் கலைத்து ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்தது என்றால் அது 1991 ஜனவரி மாதத்தில் கலைக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் இருந்த திமுக ஆட்சிதான் கலைக்கப்பட்டது. ஆட்சி கலைப்பு அறிவிப்பை காலையில் இருந்தே எதிர்பார்த்திருந்த கலைஞர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து கொண்டிருந்தார். அப்போது முரசொலி மாறன் எம்பி, டெல்லியில் இருந்து அங்குள்ள சூழல்களை விவரித்துக் கொண்டிருந்தார். அன்று இரவு 10.30 மணி முரசொலி அலுவலகத்தின் ஆசிரியர் குழு செய்தியை எந்த முறையில் வெளியிடுவது, என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்தர் முரசொலி செல்வம்.

அடுத்த சில நிமிடங்களில் செய்தி, அதற்கான தலைப்பு, முதன்மை செய்தியை ஒட்டிய பெட்டி செய்திகள் என அனைத்தையும் விறுவிறுவென எழுதி முடித்து, எதை எந்த பக்கத்தில் போட வேண்டும் என்று அங்கிருந்தவர்களுக்கு விளக்கிவிட்டு புறப்பட்டு சென்றார். ‘ஜனநாயக படுகொலை’ என்பதுதான் தலைப்பு. கலைஞர் அங்கே இருந்திருந்தால் முரசொலி மாறனும் வந்திருந்தால் என்ன தலைப்பு வைப்பார்களோ, எப்படி செய்தியை கொடுப்பார்களோ, அதனை அவர்கள் இல்லாத சூழலிலும் அப்படியே பிரதிபலிக்க கூடியவராக இருந்தவர்தான் முரசொலி செல்வம். எத்தகைய நெருக்கடியான நேரத்திலும், அமைதியான அணுமுறையுடன் ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தக் கூடியவர் முரசொலி செல்வம்.

* சினிமாவிலும் ஜொலித்த முரசொலி செல்வம்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் சில படங்களை முரசொலி செல்வம் தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில், ‘இது எங்க நாடு’, ‘பூக்காரி’, ‘அணையா விளக்கு’, ‘திருட்டு ராஜாக்கள்’, ‘காவல் கைதிகள்’, ‘குற்றவாளிகள்’, ‘காகித ஓடம்’, ‘குலக்கொழுந்து’ ஆகியவை முக்கியமான படங்களாகும். அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

* கலைஞரின் எண்ணத்தை எழுத்தில் தீட்டியவர்
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்நாளை முரசொலியில் கழித்திருக்கிறார். முரசொலி பதிப்பில் வெளியான சிலந்தி என்ற தலைப்பில் கட்டுரைகள் செல்வம் எழுதி வந்தார். கலைஞரின் நம்பிக்கைக்குரிய அன்பு மருமகனாகவும், மனசாட்சியாகவும் இருந்து வந்தவர். கலைஞரின் எண்ணத்தை தனது எழுத்துகளால் பிரதிபலித்து இருக்கிறார். கிட்டத்தட்ட கலைஞரின் மூத்த மகன் போல இருந்து வந்த முரசொலி செல்வம், முதல்வர் மு.க ஸ்டாலினை இளைய வயதில் உடன் இருந்து நன்கு கவனித்த அண்ணனாகவும் அவர்களின் குடும்பத்தில் கவனிக்கப்படுகிறார்.

* கொள்கை உறுதிமிக்க பத்திரிகையாளராக செயல்பட்டவர்
‘சிலந்தி’ என்ற பெயரில் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். கலைஞரின் எழுத்தில் பொதிந்திருக்கும் எள்ளல் நடையை உரிமையுடன் பெற்றுக் கொண்டு, தனது பாணியிலான கட்டுரைகளை வழங்கியவர் முரசொலி செல்வம். அக்டோபர் 8ம்தேதி அன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நையாண்டியால் நையப் புடைத்து கட்டுரை எழுதியிருந்தார். இன்று அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்து வைத்து விட்டு, சற்று ஓய்வெடுத்தவர் நிரந்தர ஓய்வுக்குள்ளாகிவிட்டார். தனது 84வது வயதிலும் கொள்கை உறுதிமிக்க பத்திரிகையாளராக செயல்பட்டதுடன், சமூக வலைதளங்களில் இளையவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களையும் உற்று கவனித்து, அவற்றை முரசொலியில் வெளியிடச் செய்து ஊக்கப்படுத்தியவர். 50 ஆண்டு கால அரசியல் நிகழ்வுகள் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக தெளிவுபடுத்தக் கூடியவர் முரசொலி செல்வம். தேர்தல் களத்தை துல்லியமாக உணர்ந்து, முடிவுகளை முன்கூட்டியே கணிக்கக்கூடியவர். சாதக, பாதகங்களை மீறி திமுகவின் கொள்கை பயணம் தொடர்ந்திட உரிய ஆலோசனைகளை வழங்கி தலைமைக்கும், கட்சிக்கும் பாலமாக திகழ்ந்தவர் முரசொலி செல்வம். இத்தனை ஆற்றல்கள் நிறைந்த போதும், எப்போதும் அமைதியானவர் என பெயரெடுத்தவர் முரசொலி செல்வம். இப்போது அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.

The post அடக்குமுறைக்கு அஞ்சாத முரசொலி செல்வத்தின் வாழ்க்கை பாதை appeared first on Dinakaran.

Tags : Murasoli Selvam ,Muraseli Maran ,Thiruvarur district, Thiruvarur district ,Paneer Selvam ,
× RELATED முரசொலி செல்வம் மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல்