×

நகராட்சி பகுதியில் 20 ஆண்டுக்கு பிறகு கழிவுநீர் கால்வாயில் தூர்வாரும் பணி

*100 டன் கழிவுகள் அகற்றம்

தர்மபுரி : தர்மபுரி நகராட்சியில் 20 ஆண்டிற்கு பிறகு 2 கிலோ மீட்டர் தூரம் அகல கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. 100 டன் கழிவு சேறும், சகதியுமான மண், குப்பைகள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி 8, 9 மற்றும் 4வது வார்டுகளில் தெற்கு ரயில்வே லைன், ஆவின் குளிர்பதன கிடங்கு, டிஏஎம்எஸ் காலனி, வட்டார வளர்ச்சி நகர் மற்றும் சந்தைபேட்டை உள்ளன.

இந்த பகுதியில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த தெருக்களின் வழியாக 20 அடி அகலத்தில் அகன்ற பரப்பில் 2 கிலோ மீட்டர் தூரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ராமாக்காள் ஏரியில் சென்று சேர்கிறது.

இந்த கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாததால், செடி கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்திருந்தது. மேலும் மழைக்காலத்தில் மண் அடித்துவரப்பட்டு குவியலாக காணப்பட்டது. குறிப்பாக தூர்வாரப்படாததால், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நின்று செல்லும் நிலையில் இருந்தது.

கடந்த ஆண்டுகளில் பருவமழை காலங்களில் கனமழை பெய்யும் நாட்களில் தெற்கு ரயில்வே லைன், டிஏஎம்எஸ் காலனி தெருக்களில் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும். இதனால் குடியிருப்பு மக்கள் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

நீண்ட தூரம் செல்லும் இந்த அகன்ற கழிவுநீர் கால்வாயை செடிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கை ஏற்று தற்போது நகராட்சி நிர்வாகம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கால்வாயை தூர்வாரும் பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டுள்ளது.

சிறிய ரக பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப் படுகிறது. இந்த தூர்வாரும் பணிகளை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே லைன் மற்றும் டிஏஎம்எஸ் காலனி மக்கள் கூறுகையில், ‘தர்மபுரி நான்கு ரோட்டில் தொடங்கிய, இந்த கால்வாய் நெளிந்து, வளைந்து, நேராக ராமாக்காள் ஏரியில் சென்று சேருகிறது. மழைக்காலத்தில் நீண்ட தூரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் இந்த பெரிய கால்வாயின் வழியாக கரைபுரண்டு ஓடும்.

அப்போது அடைப்பு ஏற்பட்டு தெருக்களிலும், குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்துவிடும். இதனால் பாம்பு, தவளை தொல்லைகள் அதிகமாக இருக்கும். மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லையும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஆவின் கட்டிடம், உழவர் சந்தை, திமுக ஆபீஸ் பின்புறம் என 2 கிலோ மீட்டருக்கு இந்த கால்வாய் தூா்வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது மக்களின் கோரிக்கை ஏற்று நகராட்சி நிர்வாகம் தற்போது தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது,’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி நகராட்சியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஆவின் கட்டிடம், உழவர் சந்தை, திமுக ஆபீஸ் பின்புறம் 20 அடி அகல கால்வாய் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூர்வாரப்படுகிறது. 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டு, அதிலிருந்து 100 டன் கழிவு சேறு, சகதி மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

நேதாஜி பை-பாஸ் சாலை, நான்கு ரோடு மற்றும் நகரத்தின் முக்கிய தெரு, சாலைகளில் உள்ள மழைநீர் ஒருங்கிணைத்து இப்போது தூர்வாரப்படும் அகல கழிவுநீர் கால்வாயின் வழியாக, ராமக்காள் ஏரிக்கு செல்லும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது.

இதன் மூலம் மழைநீர் வீணாகாமல், ஏரிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடியிருப்புக்குள் மழைநீர் செல்லாத வகையில் தூர்வாரும் பணிக்காக அரசு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தூர்வாரும் பணிகள் முடிந்து விடும்,’ என்றனர்.

The post நகராட்சி பகுதியில் 20 ஆண்டுக்கு பிறகு கழிவுநீர் கால்வாயில் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED வழக்குகள் நிலுவையில் உள்ளதால்...