செல்போன், டிவி, கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தும் சிறுவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு அதிகரிப்பு: பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம்


தாம்பரம்: பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பான பொது விழிப்புணர்வை வலியுறுத்துவதற்காக, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக பார்வை தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1998ம் ஆண்டில் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் உலகெங்கிலும் உள்ள பார்வை திறனற்ற விளக்க அமைப்புகளுடன் இணைந்து முதல் உலக பார்வை தினத்தை அறிமுகப்படுத்தியது. இது பார்வையற்றோர் தடுப்புக்கான சர்வதேச ஏஜென்சி (ஐஏபிபி) தலைமையிலான உலகளாவிய திட்டமாகும். இதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக பார்வை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கண் பாதிப்புகள் மற்றும் கண்களை பராமரிப்பது குறித்த வழிமுறைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்துகொள்வது, 20-20-20 என்ற நிமிட இடைவெளி விதியில் அடிக்கடி இடைவெளி எடுப்பது, கணினி திரையை கண் மட்டத்திலிருந்து 15 முதல் 20 டிகிரி கீழே வைத்து பயன்படுத்துதல், கண்களை ஈரமாக வைத்திருக்க அடிக்கடி கண்களை சிமிட்டுவது, வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து செல்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், கண்களுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, புகைப்பிடிப்பதை நிறுத்துவது, பிரச்னை வருவதற்கு முன்பே கண் பரிசோதனை செய்து கொள்வது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு நகர மக்களை விட கிராம மக்களுக்கு அதிக அளவில் தேவை என்பதால், தொடர்ந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களில் இந்த நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான உலக பார்வை தினத்தின் கருப்பொருளாக “குழந்தைகளே உங்கள் கண்களை நேசியுங்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு கண்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் னிவாச ராவ் கூறியதாவது: உலகளவில் 450 மில்லியன் குழந்தைகளுக்கு பார்வை பாதிப்பு உள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இல்லை. இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதிப்புகளை சரி செய்ய முடியும். நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கண் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. இந்தியாவில் 15 வயதுக்குள் இருக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்படுகிறது.

ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சை அளித்தால் அதனை சரி செய்ய முடியும். 14 வயதுக்குள் சிகிச்சை பெற்றால் 80 சதவீதம் பாதிப்புகளை சரி செய்ய முடியும், 14 முதல் 18 வயதுக்குள் சிகிச்சை பெற்றால் 50 சதவீத பாதிப்புகளை சரி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. 18 வயதிற்கு மேல் சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதிப்புகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும். எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை வாங்குகிறோம். அவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 10 சதவீத பேர் மட்டுமே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். தற்போது குழந்தைகள் அதிக அளவில் செல்போன்கள், டிவிகள் போன்றவற்றை பயன்படுத்தும் போது அவர்களுக்கு கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகிறது. அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள்.

அதேபோல வகுப்பறையில் மாணவர்களுக்கு கண் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பது குறித்து ஆசிரியர்களும் தெரிய வரும்போது இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவித்து அவர்கள் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்புகிறார்கள். 31 வாரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளுக்கும் கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே பார்வை சார்ந்த ஆரோக்கியம் மற்றும் அது குறித்தான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். கண்கள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். கண்களை தொடுவதற்கு முன், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். செல்போன், டிவிகளை அதிக நேரம் பார்ப்பதை குறைக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் கீரைகள், மீன், முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் பார்வைத்திறனை வலுப்படுத்திக்கொள்ள முடியும். முக்கியமாக அனைவரும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். மாலை நேரங்களில் மைதானத்தில் குழந்தைகள் அதிக அளவில் விளையாட வேண்டும்.

இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வுடன் இருந்தால் கண் பாதிப்புகளை ஏற்படாமல் தடுக்கலாம். அதேபோல், கண் பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் அதனை ஆரம்பத்திலேயே சரி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். தனியார் மருத்துவமனையின் கண் மைய இயக்குனர் டாக்டர் ரவீந்திர மோகன் கூறுகையில், ‘‘ஒரு மனிதனின் புலன்களில் பார்வை மிக முக்கியமானது, ஏனெனில் அது நமது சுற்றுப்புறத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள 70 சதவீதம் நமக்கு பங்களிக்கிறது. நமது பார்வையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்னைகள் இருப்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பது சிறந்த வழிவாகும். அவ்வாறு செய்யாவிட்டால், அது நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

நவீன மற்றும் விரிவான கண் பராமரிப்பு வசதிகள் மற்றும் சேவைகளின் வளர்ச்சியில் நமது நாடு, குறிப்பாக தமிழகம் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு நல்ல தரமான பார்வையை மீட்டெடுக்க கண்புரை லென்ஸ்கள் பொருத்தப்படுவதன் மூலம் கண்புரை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் நிறைய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கண் சிமிட்டும் வீதம் குறைதல், அருகில் வேலை செய்வதற்கு தேவையான கண் தசைகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் பிரகாசமான ஸ்கிரீன்களை பார்த்து நீண்ட நேரம் வேலை செய்தல் ஆகியவை கணினி பார்வை நோய் அறிகுறி அல்லது டிஜிட்டல் கண் திரிபு எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும். இந்த நிலை பார்வை இழப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது கணிசமான அசவுகரியம், கண் சோர்வு, தலைவலி மற்றும் கழுத்து மற்றும் முதுகுவலி ஆகியவற்றைக் கூட ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக மன அழுத்தம், உற்பத்தித்திறன் இல்லாமை மற்றும் இன்னும் பல்வேறு உடல் நலப்பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த அறிகுறிகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள் எளிமையானவை மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல், கம்ப்யூட்டர்களில் பணிபுரியும் போது சிறிது நேரத்திற்கு பின்னர் எழுந்து நிற்பது, கண்ணுக்கான சொட்டு மருந்துகளை பயன்படுத்துதல் போன்றவை இவை தொடர்பான கண் பாதிப்பை குறைக்கலாம் மற்றும் தடுக்கலாம். உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே, விலைமதிப்பற்ற நம் கண்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் நம் கண்கள் வாழ்நாள் முழுவதும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும்,’’ என்றார்.

தடுப்பு வழிமுறைகள்
* 20-20-20 விதியைப் பின்பற்றி கணினித் திரையில் இருந்து 20 அடி தொலைவில் உள்ள ஒன்றைக் குறைந்தது 20 வினாடிகளுக்குப் பார்த்து உங்கள் கண்களுக்கு ஓய்வு அளிக்கவும்.
* வெளியில் செல்லும் போது சன்கிளாஸ் அணிய வேண்டும்.
* கண்ணாடிகள் தேவைக்கேற்ப அணிவதை உறுதி செய்யவும்.
* நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய அழகுசாதனப் பொருட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,.
* வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்
பிரபல தனியார் மருத்துவமனையின் கண் மருத்துவர் மற்றும் ஆலோசகர் டாக்டர் டயானா கூறுகையில், ‘‘உலகப் பார்வை தினம் என்பது ஒரு சர்வதேச விழிப்புணர்வு தினம். பார்வை இழப்பை தடுப்பது மற்றும் கண் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை முதலியான குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். வளர்ந்த நாடுகளில் பார்வை இழப்புக்கு மிகவும் பொதுவான காரணிகளாக உள்ளவை, கண்புரை, கண் அழுத்த நோய், நீரிழிவு ரெட்டினோபதி, குழந்தை பருவ பார்வை குறைபாடு, விழிப்படல ஒளிபுகாநிலை, வயது தொடர்பான மாகுலர்சிதைவு. ஏனெனில் இவை அனைத்திற்கும் முறையான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை மூலம் பார்வை இழப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.

நீரிழிவு நோயாளியா நீங்கள்? கூடுதல் கவனம் வேண்டும்
நீரிழிவு என்னும் தொற்றா நோய் இந்தியாவில் அதிகரித்து வருவதால் அதை முறையாக கவனிக்காவிட்டால் அது பார்வை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. விழித்திரை நோயை எதிர்த்துப் போராடுவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கண் நோய்க்கான நீரிழிவு நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கும், லேசர் சிகிச்சை, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்குவதற்கும் மிகப்பெரிய தேவை உள்ளது. மடிக்கணினி, டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள், குறிப்பாக மொபைல் போன்களின் பரவலான பயன்பாடு, இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் கண்களைப் பாதிக்கிறது.

The post செல்போன், டிவி, கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தும் சிறுவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு அதிகரிப்பு: பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: