தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு பிஎஸ்என்எல் – உற்பத்தியாளர் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தொலை தொடர்பு துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், பொது மக்களிடம் அதிநவீன தகவல் தொடர்பை கொண்டு சேர்க்கும் வகையிலும் பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுமக்களிடம் அதிநவீன தகவல் தொடர்பை கொண்டு சேர்த்தல், தகவல் பாதுகாப்பை மேம்படுத்துதல், கண்ணாடி இழை தொழில்நுட்ப சேவைகளை நடுத்தர, சிறு ,குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பாக பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (AIMO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிஎஸ்என்எல் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கல்யாண் சாகர் நிப்பானி, தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைத்தொடர்பு தலைமை பொது மேலாளர் பார்த்திபன், முதன்மை பொது மேலாளர் மனிஷ சுக்லா ஆகியோர் தலைமையில் கையெழுத்தானது. மேலும் இதில் டெல்லியிலிருந்து இணைய வழியில் பிஎஸ்என்எல் தலைவர் ராபர்ட் ஜெராட் ரவி கலந்து கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.தொடர்ந்து அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: டெலிகாம் பிஎஸ்என்எல் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை, அதனால்தான் மனிதவளம் குறைவாக இருக்கிறது. மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் – ஏஐஎம்ஒ (AIMO) இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து அமைச்சர்களோடு பேச இருக்கிறோம். பிஎஸ்என்எல் உடன் இணைந்து நாடு முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு தொலை தொடர்பு குறித்த பயிற்சி அளிக்க இருக்கிறோம், குறைந்தபட்சம் 12ம் வகுப்பு கல்வி தகுதியும் 21 வயது நிரம்பி இருந்தால் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். டெலிகாம் தொழில்துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பது தெரியவில்லை. நாளைக்கே 100 தொழில்நுட்ப வல்லுநர் வந்தாலும் வேலைக்கு ஆள் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருந்தால் போதும் நாங்களே பயிற்சி வழங்கி வேலையும் வழங்குகிறோம். டவர் டெக்னீசியன் டெலிகாம் டெக்னீஷியன், பிரோட் பேண்ட் டெக்னீசியன் உள்ளிட்டர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருக்கிறோம். பயிற்சி வழங்கி வேலைக்கு எடுத்து பின் இளைஞர்களே தொழில் முனைவராக உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு பிஎஸ்என்எல் – உற்பத்தியாளர் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: