சென்னையில் உள்ள என்ஐஇபிஎம்டி மையத்தில் மாநில அரசுடன் இணைந்து உள்நோயாளிகள் பிரிவு: பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் தகவல்

சென்னை: முட்டுக்காட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவன மையத்தில் மாநில அரசுடன் இணைந்து உள்நோயாளிகள் பிரிவு தொடங்க திட்டமிட்டு இருப்பதாக மைய பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார். ஆயுஷ் துறையின் 100 நாள் சாதனை குறித்து செய்தியார்கள் சந்திப்பு சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடந்தது. அப்போது தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சிலின் தலைவர் ஜெயக்குமார், உதவி இயக்குநர் கொல்லி ராஜூ, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: ஓமியோபதி மருந்துகளை இந்தியாவிலேயே தயாரித்து உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்துவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஓமியோபதி மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றிய அரசு அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் ஆயுஷ் துறை வியட்நாம், மலேசியா உள்ளிட்ட 50 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்நிலையில், ஓமியோபதி மருந்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயுஷ் துறை சார்பில் கடந்த 100 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. குறிப்பாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், ஆயுஷ் மருத்துவத்தை பிரபலப்படுத்த தேசிய அளவிலான பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்காக 14,692 ஆயுஷ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னை முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவன மையத்தில் (என்ஐஇபிஎம்டி – NIEPMD) ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அந்த மையத்தில் முட்டுக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கோவளம், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஓமியோபதி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத பணி அனுபவ பயிற்சி வழங்கப்படுவதுடன், கோவளம், கேளம்பாக்கம் பஞ்சாயத்துகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல, தென் தமிழகத்தில் ஒரு மையத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் புறநோயாளிகள் பிரிவு மட்டுமே இயங்கி வருகிறது. 25 படுக்கைகளை கொண்ட உள்நோயாளிகள் பிரிவு தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம், அதற்காக மாநில அரசிடம் தனியாக இடம் கேட்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 

The post சென்னையில் உள்ள என்ஐஇபிஎம்டி மையத்தில் மாநில அரசுடன் இணைந்து உள்நோயாளிகள் பிரிவு: பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: