×

மக்களவை தேர்தல் முடிந்து நடந்த முதல் பேரவை தேர்தல்; அரியானா, ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிந்து முதன்முறையாக நடந்த அரியானா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (அக். 8) எண்ணப்படுவதால், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக். 1) வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்று கட்டங்களிலும் சேர்த்து 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா (பத்காம், கந்தர்பால்), மக்கள் ஜனநாயக கட்சியின் சஜத் கனி லோன் (ஹந்த்வாரா, குப்வாரா), ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா (பட்டாமலூ), பாஜக மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா (நவுஷேரா) உள்ளிட்ட 873 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப் பேரவை அமையும் என்பதே பெரும்பாலான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளின் முடிவுகள் உள்ளன. காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டிற்கு பின் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பேரவைத் தேர்தல் என்பதால், துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் செயல்பட்டு வந்தது. எனவே நாளை (அக். 8) 20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் ஜம்மு – காஷ்மீரில் புதிய அரசை உருவாக்கும். அதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் பாஜக முதல்வர் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா (கர்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் சவுதாலா (எல்லேனாபாத்), ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா (உச்சனா காலன்), பாஜகவின் அனில் விஜ் (அம்பாலா கண்டோன்மென்ட்), காங்கிரசின் வினேஷ் போகாத் (ஜுலானா), சுயேச்சை சாவித்ரி ஜிண்டால் (ஹிசார்) உள்ளிட்ட 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்றும், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும், ஆம்ஆத்மியும் போட்டியிட்டுள்ளது. எனவே நாளை (அக். 8) அரியானாவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், மாநிலத்தில் பாஜக ஆட்சியை பறிகொடுக்குமா? காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து அடுத்த சில மாதங்களில் அரியானா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துள்ளதால், நாளைய தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணி – எதிர்கட்சிகளின் கூட்டணியின் பலம் தெரிந்துவிடும்.

The post மக்களவை தேர்தல் முடிந்து நடந்த முதல் பேரவை தேர்தல்; அரியானா, ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Aryana ,Jammu and ,Kashmir ,NEW DELHI ,Jammu ,and Kashmir assembly ,Ariana ,Dinakaran ,
× RELATED கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது...