கரூர் மாவட்டம், குளித்தலையில் சைபர் குற்றம், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

* ஏடிஎம்-ல் பணம் எடுக்க ‘ரகசிய குறியீடு எண்ணை’ கவனமாக பயன்படுத்துங்கள்

* டிஎஸ்பி எச்சரிக்கை

குளித்தலை : பழைய வாகனங்களை விலைக்கு வாங்கும் பொழுது, வாகனத்தின் பதிவேடுகள் இஞ்சின் மற்றும் சேஸ் எண் சரியாக உள்ளதா என தணிக்கை செய்யாமல் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என டிஎஸ்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலைய சரகத்தில் மாநில காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் சைபர் குற்றம், போதை பொருள் தடுப்பு, மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளித்தலை காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமை வகித்தார். அதில், காவல் ஆய்வாளர் உதயகுமார் சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம் அளித்து பேசினார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்தும் அப்பிரச்சனைகளுக்கு காவல்துறையால் அறிவிக்கப்பட்ட அவசர எண்களை குறிப்பிட்டு ஒவ்வொரு எண்களுக்கும் விளக்கம் அளித்து பேசினார். போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் போக்குவரத்து துறையில் பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்திலா பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார்.

குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் பேசியபோது: ‘இந்த விழிப்புணர்வு கூட்டம் குற்றங்களை தவிர்க்க எதிர்கொள்ள விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதனால், பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது உங்களைத் தாண்டி ஒரு மோட்டார் சைக்கிள் சென்று உங்களை நோக்கி திரும்பி வந்தால், அவன் ‘உங்கள் நகைகளை பறிக்க வருகிறான்’ என்று உஷாராகி விட வேண்டும்.

வங்கியில் ஏடிஎம் பணம் எடுக்கும் பொழுது அருகில் உள்ளவருக்கு தெரியாமல் உங்கள் ‘ரகசிய குறியீடு எண்ணை’ பயன்படுத்த வேண்டும். உங்கள் தொலைபேசிக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் போன் செய்து வங்கியில் இருந்து பேசுகிறோம் என கூறி ‘உங்கள் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம் எண், ரகசிய குறியீடு, ஓடிபி’ ஆகியவற்றை கேட்டால் யாரும் கொடுக்க கூடாது.
தொலைபேசி, மின்வாரிய அரசு ஊழியர்கள் போன்று முன்பின் தெரியாத நபர்கள் வரும்போது அடையாள அட்டைகளை கேட்டு சரி பார்க்க வேண்டும்.

வீட்டை வாடகைக்கு விடும் போது அவர்களுடைய உறவினர்களின் விவரங்கள், அலுவலக தொழில் விபரங்கள், லைசென்ஸ், பாஸ்போர்ட், கேஸ், வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றின் நகல் பெற்ற பின் அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக அங்கீகாரமற்ற டிராவல் ஏஜென்சிகளிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். அதனால், பாதி வழியில் திரும்பி வர நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இருசக்கர வாகனங்களை வீட்டிற்கு வெளியே பாதுகாப்பில்லாத இடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வாகனத்தில் நிறுத்திச் செல்லும் போது சரியாக பூட்டி இருக்கிறதா என்று சரிபார்த்தல் வேண்டும். நவீன ரக போ கிளாக் லாக் அல்லது இரும்பு சங்கிலியை கொண்டு பிறை திட வேண்டும். இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் தெருவிளக்கு வெளிச்சம் இல்லாத இடங்களில் வாகனங்களில் நிறுத்திச் செல்வதை தவிர்க்க வேண்டும். பழைய வாகனங்களை விலைக்கு வாங்கும் பொழுது, வாகனத்தின் பதிவேடுகள் இஞ்சின் மற்றும் சேஸ் எண் சரியாக உள்ளதா என தணிக்கை செய்யாமல் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் தனியாக வெளியில் செல்லும்போது சந்தேக நபர்கள் பின் தொடர்ந்து வந்தால் எச்சரிக்கையுடன் செயல்பட்டு அருகில் உள்ளவர்களிடமோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தொடர்பு கொள்ளவும். செயின் பிடுங்க வரும் திருடர்கள் இருசக்கர வாகனத்தில் அருகில் வரும்போது, பெண்கள் தங்கள் கழுத்தை முந்தானையால் சுற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் தனியாக நகைகளை அணிந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும்போது சேலை முந்தானை அல்லது சுடிதார் சாலில் கழுத்தை சுற்றி கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை பாதுகாக்கலாம்.

மேலும், குழந்தைகள் மற்றும் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். எப்பொழுதும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களையும், நகைகளையும் எடுத்துக்கொண்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் பயணம் செய்யும் போது வாகனத்தின் எண்களைக் குறித்துக் கொள்வதுடன் டிரைவர்களையும் நன்கு அடையாளம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதில் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் மஞ்சு கணேஷ், பந்தல் சந்துரு, சக்திவேல், சுகன்யா நவீன் பாரத் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

The post கரூர் மாவட்டம், குளித்தலையில் சைபர் குற்றம், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: