முதியவரிடம் ₹20 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல்

அணைக்கட்டு, அக்.5: அணைக்கட்டில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து முதியவரிடம் ₹20 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன்(63). இவர் மகளிர் சுய உதவிக்குழு மூலம் வாங்கிய கடன் தொகை ₹70 ஆயிரத்தை எடுப்பதற்காக, கடந்த 29ம் தேதி அணைக்கட்டு காந்தி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மிற்கு சென்றுள்ளார்.
அப்போது, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க உதவுமாறு அங்கு நின்றிருந்த வாலிபரிடம் காத்தவராயன் கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர், ஏடிஎம் கார்டை வாங்கி மெஷனில் செலுத்தி, முதியவர் தெரிவித்த பின் நம்பரை என்டர் செய்துள்ளார். பின்னர், பணம் வரவில்லை, ஏதோ தவறாக காட்டுகிறது எனக்கூறி காத்தவராயனிடம் ஏடிஎம் கார்டை திரும்ப கொடுத்துள்ளார்.

மறுநாள் கத்தவராயன் வங்கிக்கு சென்று நேரடியாக பணத்தை எடுக்க முயன்றபோது அவரது வங்கிக்கணக்கில் ₹15,000 மட்டுமே இருப்பது தெரியவந்தது. மேலும், அவரது கார்டை பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் ₹20 ஆயிரத்தை எடுத்துள்ளது தெரியவந்தது. ஏடிஎம்மில் உதவுவது போல் நடித்து அந்த வாலிபர், முதியவரிடம் கார்டை மாற்றி கொடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காத்தவராயன் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக அணைக்கட்டு அடுத்த அகரம் கீழ் காலனியை சேர்ந்த விக்னேஷ்(27) என்பவரை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பரத் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ₹20,000 மற்றும் ஏடிஎம் கார்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பிடிபட்ட விக்னேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவரிடம் ₹20 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல் appeared first on Dinakaran.

Related Stories: