திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: சிபிஐ அதிகாரிகள் உட்பட 5 பேர் நியமனம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்படம் என்ற குற்றச்சாட்டு விவகாரத்தில் சிபிஐ இயக்குனர் நேரடி கண்காணிப்பில் ஐந்து பேர் கொண்ட புதிய சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் (ஆய்வக முடிவுகள்) சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறியக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரியும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ தான் விசாரிக்க வேண்டும் என்றும் மொத்தம் ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. அவை அனைத்தையும் முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கடந்த 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

திருப்பதி லட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றநீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தில் தற்போது எழுந்திருக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் என்பது மிகவும் முக்கியமானது. இது நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளை சார்ந்தது ஆகும். இது ஒருபுறம் என்றாலும் மற்றொரு பக்கம் உணவு பாதுகாப்பு சார்ந்ததாகவும் இருக்கிறது.

மேலும் இந்த விவகாரத்தில் தற்பொழுது உள்ள சிறப்பு புலனாய்வு குழு உறுப்பினர்கள் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் எதுவும் கிடையாது என்பதால், இதே விசாரணை தொடரலாம். இருப்பினும் சில மூத்த ஒன்றிய அரசு அதிகாரிகள் அந்த குழுவில் இடம் பெறலாம். அவ்வாறு செய்வது இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் கூடுதல் நம்பிக்கை ஏற்படுத்தும். திருப்பதி பிரசாத லட்டு விவகாரத்தில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘திருப்பதி லட்டு விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர். எனவே சுதந்திரமான விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது ஆந்திர அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘எங்களது மாநில சிறப்பு விசாரணைக் குழு மீது எந்த குற்றச்சாட்டோ அல்லது அதிருப்தியோ இல்லாத நிலையில், லட்டு விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு தனது புலன் விசாரணையையே முன்னெடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘திருப்பதி லட்டுவில் கலப்படம் என்ற விவகாரம் நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமான பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதில் சமரசம் என்பதற்கு இடமே கிடையாது. குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அது மிகவும் தீவிர விஷயமாகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் எங்களுக்கும் சுதந்திரமான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனவே திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டு விவகாரத்தில் ஒரு புதிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமிக்கிறது.

அதில், ‘‘சிபிஐ இயக்குனர் பரிந்துரைக்கக்கூடிய இரண்டு சிபிஐ அதிகாரிகள், ஆந்திரப்பிரதேச காவல்துறையிலிருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் தரப்பில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் ஆகிய ஐந்து பேர்கள் கொண்ட இந்த சிறப்பு புலனாய்வு குழு இந்த விவகாரத்தை விசாரிக்கட்டும். இதனை சிபிஐ இயக்குனர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தை அரசியல் நாடகமாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து மாறுவதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

* திருப்பதி லட்டுவில் கலப்படம் என்ற விவகாரம் பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது.
* இந்த விவகாரம் அரசியல் நாடகமாவதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை.
* சுதந்திரமான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தட்டும்.
* விசாரணையை சிபிஐ இயக்குனர் நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

* சந்திரபாபு நாயுடு வரவேற்பு
உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் தளத்தில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ, ஆந்திர காவல்துறை மற்றும் எப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகள் அடங்கிய எஸ்ஐடியை அமைத்து அறிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

The post திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: சிபிஐ அதிகாரிகள் உட்பட 5 பேர் நியமனம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: