×

ரூ.4620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து, இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ளது. இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகிகள் ரவிசந்திரன், ஜெயக்குமார், சுரேஷ், துரைராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் எங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் இதற்கு நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாக தெரிவிக்கபட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்னர். மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் கால் பங்கு கூட இதுவரை மீட்கவில்லை. முக்கிய குற்றவாளி அலெக்ஸாண்டர் இன்னும் தலைமறைவாக உள்ளார். பொருளாதார குற்ற வழக்குகளில் தொடர்புடைவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. எனவே நீதிமன்றம் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார் இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி தனபால், 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

The post ரூ.4620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijau ,Chennai High Court ,Chennai ,Hijau Finance Company ,Hijab ,Dinakaran ,
× RELATED ஹிஜாவு நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!