தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை; கோமுகி அணை வறண்டதால் கேள்விக்குறியான சம்பா சாகுபடி: விவசாயிகள் கவலை

 


சின்னசேலம்: பருவமழை பொய்த்ததால் கோமுகி அணை பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகளின் சம்பா பருவ சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடியில் நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராசர் ஆட்சிக்காலத்தில் கோமுகி அணை கட்டப்பட்டது. இந்த அணையின் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. மழை காலத்தில் கோமுகி அணைக்கு கல்வராயன்மலையில் உள்ள பொட்டியம், மாயம்பாடி, கல்பொடை ஆறுகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 45க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன் மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் அப்பகுதி விவசாயிகள் கோமுகி அணை பாசனத்தின் மூலம் சம்பா பருவத்துடன் சேர்த்து மூன்று போகமும் நெல் அறுவடை செய்தனர். ஆனால் பருவகால மாற்றத்தால் பருவமழை பொய்த்து போனது. குறிப்பாக கல்வராயன் மலை பகுதியில் பெயரளவிலேயே மழை பெய்தது. இதனால் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லை. மேலும் கோமுகி அணை தூர்ந்துபோய் உள்ளதால் குறைந்த அளவில் சேமிக்கப்படும் நீரை கொண்டு ஒரு பருவம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது. சில நேரங்களில் ஒரு பருவத்திற்கே போதுமான நீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து போனதும் உண்டு.

இந்த சூழலில் நபார்டு திட்டத்தில் பழைய ஷெட்டர்களை எடுத்துவிட்டு புதிதாக மாற்ற ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இரண்டு தானியங்கி ஷெட்டர்கள் பொருத்தும் பணி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடந்தது. அப்போது மிதமான மழை பெய்ததால், கல்வராயன்மலை ஆறுகளில் இருந்து வந்த நீரை கோமுகி அணையில் சேமிக்க முடியாமல் பாசன ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வடக்கநந்தல் பகுதியில் உள்ள கல்லேரி, பெரியேரி, கடத்தூர் ஏரி, கச்சிராயபாளையம் போன்ற ஏரிகள் நிரம்பின. மேலும் தென்மேற்கு பருவகாற்று மழையும், போதிய அளவில் பெய்யவில்லை. மழை காலத்தில் ஷெட்டர் பராமரிப்பு பணி நடந்து வந்ததாலும், போதிய அளவில் மழை இல்லாததாலும் அணையில் கோமுகி அணையில் போதுமான நீரை சேமிக்க முடியாமல் போனது. ஆண்டுதோறும் சம்பா பருவ சாகுபடிக்கு கோமுகி அணை அக்டோபர் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம்.

கடந்த காலங்களில் அணை திறப்பதற்கு முன்னதாகவே அணை நிரம்பி காணப்படும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் நடந்து வரும் நிலையில் கோமுகி அணையில் போதிய நீர் இல்லாததால் அணையை திறக்க வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது கோமுகி அணையில் குட்டையாக நீர் தேங்கி நிற்பதுடன், பெரும்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் சம்பா பருவ சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

The post தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை; கோமுகி அணை வறண்டதால் கேள்விக்குறியான சம்பா சாகுபடி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: