×
Saravana Stores

ஸ்ரீசைலம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: மல்லிகார்ஜுனர் – பிரம்மராம்பிகை ஆலயம், ஸ்ரீசைலம், நந்தியால் மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம்.

திருச்சுற்று மதில்: சுமார் 2100 அடி நீளமுடைய சுற்றுச்சுவர் பெரும் கோட்டை மதில் போல் இவ்வாலயத்திற்கு அரணாக உள்ளது. இந்த பெரும் மதிற்சுவரின் வெளிப் புறம் முழுவதும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் நிறைந்துள்ளது. போர்க்காட்சிகள், நடன மாந்தர்கள், இசைக்கலைஞர்கள், புராணக்காட்சிகள் என பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டு ஒரு காட்சிக்கூடமாகக் காட்சியளிக்கிறது.

சத்ரபதி சிவாஜி: இவ்வாலயத்தின் இறைவியான பிரம்மராம்பிகையின் பரம பக்தரான மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, தனது போர் வெற்றிகளுக்கு அருளிய இந்த ஆலய அம்பிகைக்காக வடக்குப்புற கோபுரத்தை 1677இல் கட்டினார்.இன்றும் அது ‘சிவாஜி கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது.

சிவ பெருமானின் 12 ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்று, இங்குள்ள பிரம்மராம்பிகை அம்மன் சந்நதி 51 சக்தி பீடங்களில் ஒன்று, 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடங்களில் ஒன்று, நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்ற இடம் என பல்வேறு முக்கியத்துவங்கள் பெற்ற தலம் ஸ்ரீசைலம்.கந்த புராணம், மகாபாரதம் போன்ற புராண நூல்களில் ஸ்ரீ சைலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சாதவாகன வம்சத்தினரின் 2-3ஆம் நூற்றாண்டு கல்வெட்டுச் சான்றுகளில் இவ்வாலயம் பற்றிய செய்திகள் உள்ளன.

தேவாரம்: ஏழாம் – எட்டாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பட்ட தேவாரத்தில் குறிப்பிடப்பட்டதால் அதற்கு முன்பிருந்தே இவ்வாலயத்தின் பழமையை அறியலாம்.
‘திருப்பருப்பதம்’ என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இத்தலம்.

‘சுடுமணி யுமிழ்நாகஞ்
சூழ்தர அரைக்க சைத்தான்
இடுமணி யெழிலானை
யேறலன் எருதேறி
விடமணி மிடறுடையான்
மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார்
பருப்பதம் பரவுதுமே’

இறைவன்: மல்லிகார்ஜுனர்
இறைவி: பிரம்மராம்பிகை

ஆலயத்தின் மத்தியப்பகுதியில் உள்ள கருவறையில் லிங்க வடிவில் மல்லிகார்ஜுனர் அருள்பாலிக்கிறார். காகதீய மன்னரான கணபதி தேவரின் (1199-1262) சகோதரியான மைலம்மா தேவியால் இவ்வாலய கருவறை கட்டப்பட்டதாக கல்வெட்டுத்தகவல்கள் கூறுகின்றன.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post ஸ்ரீசைலம் appeared first on Dinakaran.

Tags : Sresylum ,of ,Mallikarjunar ,Brahmarambika Temple ,Srisilam, Nandiyal District, Andhra Pradesh State ,Tiruchuttu Madil ,Srisilam ,
× RELATED திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54வது...