தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில், வரும் 31ம்தேதிக்குள் ரூ21.24 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்து வசூலிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகளும், 21 ஆயிரம் குடியிருப்புகளும், 6 ஆயிரம் பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளும், கடைகள், வணிக நிறுவனங்கள் என மொத்தம் 64 ஆயிரம் உள்ளன. தர்மபுரி நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ28.50 கோடி. சொத்துவரி, தொழில்வரி, காலிமனை வரி, நகராட்சி கடைகளின் வாடகை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட இணைப்பு கட்டணம் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. மொத்தம் ₹28.50 கோடியில் ரூ21.24 கோடி வரி நிலுவையில் உள்ளது. இதில் சொத்து வரி மட்டும் 5.37 கோடி நிலுவை உள்ளது. காலிமனை வரி ₹20.06 லட்சம் உள்ளது.
குடிநீர் வரி ₹3.86 கோடி நிலுவையில் உள்ளது. இந்த வரிகளை வசூலிக்க காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை ஆணையர் முதல் நகராட்சி அலுவலக உதவியாளர் வரை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி நகராட்சி ஆணையராக இருந்த புவனேஸ்வரன், சேலம் மாநகராட்சிக்கு துணை ஆணையராக இடமாறுதல் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி ஆணையர் ஸ்டாலின் பாபு பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று திருச்செங்கோட்டில் இருந்து வந்த சேகர் தர்மபுரி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் சேகர், நகரமன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் கூறியதாவது: தர்மபுரி நகராட்சியில் நிலுவையில் உள்ள ₹21.24 கோடி வரியை, வரும் 31ம்தேதிக்குள் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்து, தீவிர வசூலிப்பில் ஆணையர் முதல் ஊழியர்கள் வரை ஈடுபட்டுள்ளோம்.
அரசு துறைகள் பல லட்சம் நிலுவை வைத்துள்ள நிலையில், அதன வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. வரி வசூலிப்பு மூலம் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அடிப்படை நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தர்மபுரி நகராட்சியில் சொத்து வரியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை, தர்மபுரி நகர பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனடியாக செலுத்தி பயன்பெற வேண்டும்.
தர்மபுரி நகராட்சி கணினி சேவை மையத்திலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை உடனே செலுத்தும் வசதி உள்ளது. தர்மபுரி நகராட்சி மக்களின் தேவைகளை அறிந்து, குறித்த நேரத்தில் நிறைவேற்றப்படும். அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post தர்மபுரி நகராட்சியில் இம்மாத இறுதிக்குள் ரூ21.24 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம்: புதிய ஆணையாளர், தலைவர் தலைமையில் நடவடிக்கை appeared first on Dinakaran.