×

அஷ்டம தசையில் புதிய முயற்சிகள் செய்யலாமா?

ஜோதிடத்தை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? சொல்பவர்கள் எப்படிச் சொல்ல வேண்டும்? கேட்பவர்கள் அதை எந்த அளவுக்கு கேட்க வேண்டும்? என்பதைக் குறித்து மிகத் தெளிவான சிந்தனை வேண்டும். எந்த நேரத்திலும் மனதைரியம் இழந்துவிடுவது போல சொல்லி விடக் கூடாது. எச்சரிக்கை செய்வது என்பது வேறு. இயங்கவே கூடாது என்பது வேறு. செயலை முடக்கக் கூடாது. எப்படி கவனமாகச் செய்வது என்பதையே சொல்ல வேண்டும். இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொன்னால் புரியும். இப்பொழுது ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னால் யாரிடமும் வழி கேட்க வேண்டியதில்லை. கூகுள் மேப் என்று இருக்கிறது அதில் எங்கிருந்து புறப்படுகிறோம்? எங்கே போய்ச் சேர வேண்டும் என்ற முகவரியை கொடுத்துவிட்டால், அது நம்மை வழிநடத்தும்.

எங்கே திரும்ப வேண்டும்? எந்தெந்த இடத்தில் எதெல்லாம் இருக்கின்றன? என்பதைச் சொல்லிக் கொண்டே வரும். இதை வைத்துக் கொண்டு பெரும்பாலோர் சரியான இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். ஆனால் சமீபத்தில் என்ன நடந்தது என்று சொன்னால், விருதாச்
சலம் கம்மாபுரம் இடையில் ஏதோ ஒரு கிராமம். அங்கே ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டும். காரில் வந்தார்கள் அந்த முகவரியை போட்டுவிட்டு கூகுள் மேப் காட்டுகின்ற திசையிலே போனார்கள்.ஆனால், ஒரு இடத்தில் அவர்களால் மேற்கொண்டு போகமுடியவில்லை. காரையும் நகர்த்த முடியவில்லை. காரணம் அது ஒரு ஆற்றங்கரையில் மணலில் போய் இறங்கி மேற்கொண்டு நகராமல் நின்றுவிட்டது. ஆனால் கூகுள் “நீங்கள் வலது பக்கம் திரும்பவும்” என்று சொல்லிக் கொண்டே இருந்தது.

அவர்கள் கிராமத்து ஜனங்களை அழைத்து வந்து டிராக்டர் கட்டி வண்டியை வெளியே எடுத்து, கிராமத்து ஜனங்கள் சொன்ன வழியில் திருமண மண்டபத்தை அடைந்தார்கள். இந்த உதாரணத்தை ஓரளவு ஜோதிடத்தோடு பொருத்திப் பாருங்கள். நான் சொன்னது உதாரணம் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். எந்த உதாரணங்களும் 100 சதவீதம் சரியாக இருக்காது. உதாரணங்கள் என்பது புரிந்து கொள்வதற்காக சொல்லப்படுவதுதான். என்னதான் மேப் காட்டிய வழியில் சென்றாலும், இதுவரை அந்த மேப் காட்டிய வழி 95 சதவீதம் சரியாக இருந்த நம்பிக்கையில் சென்றாலும், என்ன செய்திருக்க வேண்டும்? இருட்டாக இருக்கிறதே, ஊரும் புதிதாக இருக்கிறதே, என்று காரை நிறுத்தி, அங்கே அருகில் இருக்கிறவரிடம், “ஐயா, இந்த திருமண மண்டபம் இந்த ஊரில் எந்த இடத்தில் இருக்கிறது? நாங்கள் செல்லும் பாதை சரிதானா?” என்று கேட்டிருந்தால், அவர்கள் சரியான பாதையை இன்னும் சொல்லப் போனால், எளிமையான பாதையையும் காண்பித்து இருப்பார்கள்.

பிரதான சாலையிலே கூகுள்மேப் சொன்னபடி மிக அழகாக வந்தவர்கள், இப்பொழுது சிக்கலான நேரத்திலே அங்கேயே இருக்கக் கூடிய மக்களை விசாரித்துக் கொண்டு சென்று இருந்தால், கூகுள் மேப்பினாலும் பயன் இருந்திருக்கும். உள்ளூர் மக்களினாலும் பயன் இருந்திருக்கும். ஜாதக பலன் என்பது கூகுள் வழிகாட்டி போலத்தான். அவ்வப்போது நாமும் அந்த வழியைகள் நிலவரத்தோடு பொருத்திப்பார்க்க வேண்டும்.ஜோதிடம் தன்னிடம் இருக்கக்கூடிய தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு சில விஷயங்களைச் சொல்லும். அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் நம்முடைய வாழ்க்கையின் சிக்கல்கள், நம்முடைய குடும்பச் சூழல்கள், நமக்கென்று இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய பிரத்தியேகமான அறிவு, நம்மை சுற்றி இருப்பவர்களுடைய யோசனைகள் எல்லாவற்றையும் அனுசரித்துத்தான் ஒரு முடிந்த முடிவுக்கு வரமுடியும். என்னுடைய ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன்.

நண்பர் ஒருவர் தொழில் தொடங்க ஜாதகம் காட்டினார். அவருக்கு அஷ்டம தசையின் இறுதிப் பகுதி நடந்து கொண்டு இருந்தது. தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு வந்து. எல்லோரிடமும் கேட்கும் பொழுது, ‘‘இப்பொழுது தொழில் தொடங்க வேண்டாம். எங்கேயாவது வேலைக்குச் செல்லுங்கள். இப்பொழுது தொழில் தொடங்கினால் மிகப் பெரிய இழப்பைச் சந்திப்பீர்கள்’’ என்று
சொல்லியிருந்தார்கள். அஷ்டம திசை நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் கோள் சாரமும் சாதகமாக இல்லை. அதனால் அப்படிச் சொல்லியிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்குத் தொழில் ஆர்வம் இருந்தது. அவருடைய சூழலில் உத்தியோகம் செல்ல முடியாது. இப்பொழுது தொழில் தொடங்காவிட்டால் பிறகு அந்த வாய்ப்பு வராது. என்னிடத்திலே ஆலோசனை கேட்டார். இப்பொழுது நான் வெறும் ஜாதகத்தை மட்டும் பார்க்கவில்லை. அவருடைய இயல்பு, குடும்பசூழல், அவருக்கு இருக்கக் கூடிய வாய்ப்புகள் எல்லாவற்றையும் யோசித்து அவருக்கு ஒரு விஷயத்தைச் சொன்னேன்.

‘‘நீங்கள் தொழில் தொடங்குங்கள். ஆனால், இப்போதைக்கு பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களுக்கு இதில் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும். அதை மிக எச்சரிக்கையுடன் கையாளுங்கள். உங்கள் பெயரைவிட உங்கள் மனைவியின் பெயர் இந்தத் தொழிலுக்குச் சாதகமான அமைப்பில் இருக்கின்றது. எந்த நிலையிலும் அலட்சியம் வேண்டாம். ஒவ்வொரு விஷயத்தையும் மிகக் கவனமாகச் சரி பாருங்கள். உங்களை மீறி சில கஷ்டங்கள் வரும் என்றாலும், அதை சமாளிக்கக் கூடிய மாற்று வழிகளை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அடுத்து லக்னாதிபதி திசை ஆரம்பிக்கிறது. லக்னம் வலுவோடு இருப்பதால், அஷ்டமாதி திசை நடந்து, நஷ்டம் வந்தாலும்கூட அதை எதிர்கொள்ளக் கூடிய புத்திசாலித்தனமும் திறமையும் உங்களுக்கு லக்னாதிபதி கொடுப்பார். அதை மனரீதியாக வளர்த்துக் கொள்ளுங்கள். சிறுகச் சிறுக வியாபாரப் போக்கினை கவனித்துக் கொள்ளுங்கள்.

அஷ்ட மாதிபதி திசை முடியும் வரை பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. விரக்தியும், சலிப்பும் வரலாம். கவனமும் கடவுள் பக்தியும் உங்களை வழிநடத்தும்’’ என்று சொன்னேன். அவர் அப்படியே நடந்து கொண்டார். தொழிலில் பல தடைகள். வேலைக்கு ஒழுங்காக ஆட்கள் வர மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாது. அதற்காக இவரே இறங்கி இரவு பகலாக வேலை செய்வார். பங்குதாரர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள். ஒருசில பங்குதாரர்கள் எங்களுக்கு இந்த தொழில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு உடனே பணம் தராமல் ‘‘கொஞ்சம் பொறுங்கள் நான் நிச்சயமாக உங்களுக்கு உங்களுடைய பங்கினைத் தந்து விடுகிறேன்’’ என்று உறுதிமொழிப் பத்திரம் கொடுத்து மிகக் கடுமையாக இரண்டு வருடங்கள் போராடினார். ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். ஆனால் ஒரு சின்ன விஷயம். எந்த மோசமான தசையும் முழு மோசம் செய்யாது. அதில் சில நல்ல புத்திகள் வரும், கோள்சாரம் மாறும். ஒருசில மாதங்கள் மிகச் சாதகமாக இருக்கும். அப்போது சற்று ஜாக்கிரதையாக இயங்கினால் மெதுவாக பிரதான தசையை கடந்து விடலாம். அப்படித்தான் செய்தார். எல்லா ஜோதிடரும் சொன்னது போலவே கடைசியில் நஷ்டம்தான். கடன் வந்தது. சின்னச் சின்ன பஞ்சாயத்துக்கள் வந்தன. இவற்றோடு வேறு ஒன்றும் வந்தது. அஷ்டம தசையின் மிகச் சிறந்த பயனாக வந்தது, அது என்ன தெரியுமா?

(அடுத்த இதழில்…)

 

The post அஷ்டம தசையில் புதிய முயற்சிகள் செய்யலாமா? appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!