தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்: அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா நேற்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம செயலி “Namma Grama Sabhai Mobile App” மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் 1.4.2024 முதல் 30.9.2024 முடியவுள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவின அறிக்கையை சபையில் படித்து காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். 2023-24ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தூய்மையான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

குளோரின் கலந்த குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்ய வேண்டும். 2025-26ம் நிதியாண்டிற்கு தேவையான பணிகள், வசதிகள் ஆகியவற்றை தொகுதி கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஊராட்சி வாரியான மாற்றுத்திறனாளிகளின் பட்டியல் சரிபார்க்க வேண்டும். கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் SREல் சேர்க்கப்படாமல் இருந்தால், அவர்களின் விவரங்கள் அந்தந்த ஊராட்சிக்கான தரவு கணக்கெடுப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் சான்றிதழை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல்டுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமையான விவரத்தை கிராம சபையில் விரிவாக எடுத்துரைத்து, இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி’ என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிராம ஊாட்சி தலைவரால் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: