×
Saravana Stores

கடந்த 15 வருடங்களாக மூடியே கிடக்கும் ரயில்வே கேட் ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி: ரயிலுக்கு அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்கும் அவலம்; நிரந்தர நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை புறநகர் மார்க்கத்தில் முக்கிய நிலையமாகத் திகழ்கிறது ஆவடி ரயில் நிலையம். இங்கு ஒன்றிய அரசின் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை, விமானப்படை, ஆவடி ஆணையரகம், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் உள்ளன. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு பணிபுரிகின்றனர்.

இதைத் தவிர ஆவடியைச் சுற்றி ஏராளமான பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள்‌, ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி மாநகராட்சி ஆகியவை உள்ளன. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். பணிக்கு வந்து செல்பவர்களில் பெரும்பாலானோர் ஆவடி ரயில் நிலையத்தை பயன்படுத்துன்றனர். ஆவடி ரயில் நிலையம் வழியாக சென்னை சென்ட்ரல் மற்றும் வேளச்சேரியில் இருந்து ஆவடி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர் ஆகிய ஊர்களுக்கு தினசரி 50 எக்ஸ்பிரஸ் மற்றும் விரைவு ரெயில்கள், 175 மின்சார ரெயில்கள், 18 சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆவடியில் இருந்து மட்டும் 13 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆவடி ரயில் நிலையம் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலைக்கும், புதிய ராணுவ சாலைக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்காக அங்கு ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி நேரு பஜார் சாலையின் குறுக்கே இந்த ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனால், அச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், ஒரு மாதத்திற்கு 5 முதல் 10 விபத்துகள் வரை நிகழ்ந்து உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று அங்கு சுரங்கப்பாதை அமைக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், அதன் பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக அங்குள்ள ரயில்வே கேட் நிரந்தரமாகவே மூடப்பட்டு கிடக்கிறது.

இதுகுறித்து, ஆவடியில் உள்ள ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதால், வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அத்துடன், பொதுமக்கள் மிகவும் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்துக்குச் செல்பவர்கள் என அனைவரும் ரயில்வேகேட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அடிக்கடி சிக்னல் கிடைக்காமல் சரக்கு ரயில்கள் இங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆகையால் பொதுமக்கள் ரயில் மீது ஏறி குதித்தும், ரயிலுக்கு அடியில் புகுந்தும் தண்டவாளத்தைக் கடக்கின்றனர். அவ்வாறு கடந்து செல்லும்போது ரயிலில் உள்ள இரும்பு கம்பியில் இடித்து தலையில் படுகாயம் ஏற்படுகிறது. எனவே ஆவடி ரயில்நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் இதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

* எஸ்கலேட்டர் பணி மந்தம்
ஆவடி ரயில்நிலையத்தில் கடந்த வருடம் நகரும் படிக்கட்டு அமைப்பதற்காக சுமார் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் இதுநாள்வரை பணிகள் மிகவும் மந்தமாக நடக்கின்றன. இதனால் ரயில் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி, இறங்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இங்கு நகரும்படிக்கட்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடந்த 15 வருடங்களாக மூடியே கிடக்கும் ரயில்வே கேட் ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி: ரயிலுக்கு அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்கும் அவலம்; நிரந்தர நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Avadi railway station ,Aavadi ,Aavadi railway station ,Chennai ,Dinakaran ,
× RELATED மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள்,...