×

மகாளய பட்ச அமாவாசை சிறப்பு அம்சங்கள்

ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியின் போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்திதனரின் பாரம்பரியமாகும். இந்த திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை சிறப்பானது. அதிலும் மகாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

*நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.

*நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை.

*பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை.

“மறந்து போனவனுக்கு மகாளய அமாவாசை” என்பார்கள். அதாவது மூதாதையர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என சொல்லப்படுகிறது. இது பற்றிய குறிப்புகள் திருவெண்காடு கோயில் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை “பெரிய அமாவாசை” என்றும் “மகாளய அமாவாசை” என்றும் கூறப்படுகிறது. பட்சம் என்றால் 15 நாள்கள் கொண்ட கால அளவைக் குறிக்கும். ‘மகாளய பட்சம்’ என்பது ஆவணி மாதப் பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை 15 நாள்களைக் குறிக்கும். இந்தப் பதினைந்து நாள்களும், முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகம் வந்து நம்மிடையே தங்கும் புண்ணிய தினங்களாகக் கருதப்படுகின்றன. எனவே இந்த நாள்களில் முன்னோர் வழிபாடுதான் பிரதானம்.இந்தப் பதினைந்து நாள்களும் முன்னோர் வழிபாடே பிரதானம். எல்லா நாள்களும் முன்னோர்களை வழிபட்ட பிறகே வழக்கமான பூஜைகளைச் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்தபிறகே வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிப் பிற பணிகளைத் தொடங்க வேண்டும்.

ஏன் மகாளய அமாவாசை முக்கியம்?

ஓர் ஆண்டில் பன்னிரு அமாவாசை திதிகள் வரும். அவற்றுள் மிக முக்கியமானது மகாளய அமாவாசை. ஏன் தெரியுமா? நம் முன்னோர்கள் பித்ரு லோகம் எனப்படும் தென்புலத்தில் இருப்பார்கள். அங்கிருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் மூலம் அளிக்கும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்தி கொள்வார்கள் என்பது நம்பிக்கை.

நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பித்ரு லோகத்திலிருந்து கிளம்பி நாம் வசிக்கும் பூமியை நோக்கிப் பயணப்படுவார்களாம். அப்படிப் புறப்பட்டவர்கள் சரியாக ஆவணி மாத பௌர்ணமி நாளுக்கு அடுத்த நாள் பூமிக்கு வந்து சேர்வார்கள். அடுத்த பதினைந்து நாள்களும் அவர்கள் நம்மோடு பூமியிலேயே தங்கி இருந்து நாம் அளிக்கும் நீரையும் உணவையும் ஏற்றுக்கொண்டு திருப்தியாகி மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ரு லோகம் நோக்கிப் புறப்படுவார்களாம்.

அப்படி நம் முன்னோர்கள் நம்மோடு இருக்கும் இந்த நாள்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல் ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. எனவே மகா புண்ணியகாலமான மகாளயபட்சம் 15 நாள்களும் நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியம் இல்லை. எனவே மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் தரவேண்டும். அப்படிச் செய்தால் ஆண்டு முழுவதும் அமாவாசை நாளில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாளய பட்சத்தில் தவிர்க்க வேண்டியவை

*இந்தப் பதினைந்து நாள்களும் சுபகாரியங்கள் செய்வது தவிர்க்கப்படும். வீடுகளில் இந்த நாள்களில் முன்னோர் வழிபாடுகளை முடித்த பின்னே கோலமிடுதல் விளக்கேற்றுதல் போன்ற வழக்கமான கடமைகளைச் செய்யவேண்டும்.

*இந்தப் பதினைந்து நாள்களும் உணவில் சாத்வீகத் தன்மை உள்ள உணவுகளையே உண்ண வேண்டும். கேளிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். கிடைக்கும் நேரங்களில் நாம ஜபங்களைச் செய்துவர வேண்டும்.

மகாளய அமாவாசை இந்த ஆண்டு 01.10.2024 அன்று வருகிறது. இந்த நாள் முழுவதுமே அமாவாசை திதி இருப்பதால் எப்போது வேண்டுமானால் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நீர் நிலைகளிலும் கோயில் மண்டபங்களிலும் சென்று இதைச் செய்வது விசேஷம். ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், திருப்பூவணம் போன்ற தலங்களில் இது விசேஷமான தினம். பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள். எல்லோரும் அங்குச் சென்று வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே வீட்டிலேயே முன்னோர்களை நினைத்து முதலில் தர்ப்பணம் கொடுத்து பின் படையல் போட்டு வழிபடுவது சிறப்பு.

யார் எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும்?

தந்தை இல்லாத அனைவரும் இந்த அமாவாசை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே அவரவர் குடும்ப வழக்கப்படி இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். தந்தை இருக்கும் பட்சத்தில் அவர் இந்த வழிபாட்டை மேற்கொள்வார் என்பதால் மகன்கள் அதில் கூட இருந்தாலே போதுமானது. நம் நேரடி பித்ருக்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் சமைத்துப் படையல் இட வேண்டும். இந்த நாளில் காக்கைக்கு அன்னம் இட்ட பிறகே உணவு உட்கொள்வது வழக்கம்.

மகாளய பட்ச காலம் முழுவதும் தர்ப்பணம் செய்தே ஆக வேண்டுமா?

மகாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள், மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனைத் தரும். பொதுவாக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டில் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் செய்யாமல், நம் முன்னோர்கள் குறித்துப் பேசுவதும், அவர்களின் பெயரில் ஏழை, எளியவர்களுக்குத் தான தர்மங்கள் செய்வதும் அளவற்ற பலன்களை அள்ளித் தரும். மஹாளய காலத்தில் அன்னதானமும் பசுவுக்கு அகத்திக் கீரை, புல், பழமும் அளிக்கலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கும்.

மகாளயபட்ச காலத்தில் தர்ப்பணம் செய்வதற்கென விசேஷ திருத்தலங்கள் உண்டா?

முன்னோர் தர்ப்பணத்துக்கு கடல் மற்றும் நதி தீரங்களும் தீர்த்தக்கரைகளும் விசேஷமானவை. ஸ்ரீ ராமன், தன் தந்தைக்கான பித்ரு கடன்களை காட்டில் இருந்தபடியே செய்து நமக்கு வழி காட்டியுள்ளார். ஸ்ரீ ராமன், ராவண வதம் செய்த பிறகு சிவ பெருமானைக் குறித்து பூஜை செய்த ராமேஸ்வரம் எனும் க்ஷேத்திரத்தில், இந்த மகாளயபட்ச அமாவாசை நாளில், தர்ப்பணங்கள் போன்ற முன்னோர் கடன்களைச் செய்வது, நம் வாழ்வை செழிக்கச் செய்யும்.

மேலும், மயிலாடுதுறை காவிரி படித்துறை, திருவாரூர் அருகிலுள்ள திலதர்ப்பணபுரி, திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு கொள்ளிடக்கரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருநெல்வேலி அருகேயுள்ள வகுளகிரி நதிக்கரை, மூன்று நதிகள் சங்கமிக் கும் பவானி, கன்யாகுமரி கடற்கரை, தேவிப் பட்டணம் நவபாஷாணம் உள்ள கடல்துறை, தென்காசி அருகில் உள்ள பாபநாசம் சிவாலய தீர்த்தக்கரை, குடந்தை மகாமகக் குளம், திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளக்கரை போன்ற இடங்கள் தர்ப்பணம் அளிக்க உகந்த இடங்கள்.

இதுபோன்ற தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? வாரிசு இல்லாத பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிப்பது குறித்த நியதி என்ன? புண்ணிய க்ஷேத்திரங்களுக்கோ, புண்ணிய நதிக்கரைகளிலோ செய்ய முடியாதவர்கள், அவரவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் தங்களது கடமையை நிறைவேற்றலாம்.

மகத்தான மகாளய தானம்

‘மகாளய தானம் மகத்தான தானம்’ என்பார்கள். இந்நாளில் வஸ்திர தானம்ம் அன்னதானம், குடை, காலணி, போர்வை ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் நம் இல்லத்தில் இல்லாமை நீங்கி செல்வ வளம் சேரும். மேலும் கோதானம் செய்வது, பசுக்களுக்கு உணவு வழங்க உதவுவது ஆகியன நம் தீராத பிரச்னைகளுக்குத் தீர்வாக மாறும். நம் முன்னோர்கள் நாம் செய்யும் தானங்களைப் பார்த்து நம் சந்ததியினர் நல்ல வழியில் வாழ்கிறார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை. எனவே மறக்காமல் இந்த மகாளய பட்ச காலத்தில் நம்மால் முடிந்த தானங்களைச் செய்து வழிபடுவோம்.

 

 

 

The post மகாளய பட்ச அமாவாசை சிறப்பு அம்சங்கள் appeared first on Dinakaran.

Tags : Hinduism ,New Moon Day ,Adi Amavasi ,Amavasi ,Mahalaya Amavasi ,
× RELATED பிரம்மச்சரியம் எனும் மலைப் பாதை