மகாளய அமாவாசை கடைப்பிடிப்பது எப்படி?

ஓர் ஆண்டில் பன்னிரு அமாவாசை திதிகள் வரும். அவற்றுள் மிக முக்கியமானது மகாளய அமாவாசை. ஏன் தெரியுமா? நம் முன்னோர்கள் பித்ரு லோகம் எனப்படும் தென்புலத்தில் இருப்பார்கள். அங்கிருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் மூலம் அளிக்கும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்தி கொள்வார்கள் என்பது நம்பிக்கை. நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பித்ரு லோகத்திலிருந்து கிளம்பி நாம் வசிக்கும் பூமியை நோக்கிப் பயணப்படுவார்களாம். அப்படிப் புறப்பட்டவர்கள் சரியாக ஆவணி மாத பௌர்ணமி நாளுக்கு அடுத்த நாள் பூமிக்கு வந்து சேர்வார்கள்.

அடுத்த பதினைந்து நாள்களும் அவர்கள் நம்மோடு பூமியிலேயே தங்கி இருந்து நாம் அளிக்கும் நீரையும் உணவையும் ஏற்றுக்கொண்டு திருப்தியாகி மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ரு லோகம் நோக்கிப் புறப்படுவார்களாம். அப்படி நம் முன்னோர்கள் நம்மோடு இருக்கும் இந்த நாள்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல் ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. எனவே மகா புண்ணியகாலமான மகாளயபட்சம் 15 நாள்களும் நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியம் இல்லை. எனவே மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் தரவேண்டும்.

அப்படிச் செய்தால் ஆண்டு முழுவதும் அமாவாசை நாளில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகாளய அமாவாசை இந்த ஆண்டு 01.10.2024 அன்று புதன்கிழமை வருகிறது. நீர் நிலைகளிலும் கோயில் மண்டபங்களிலும் சென்று இதைச் செய்வது விசேஷம். ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், திருப்பூவணம் போன்ற தலங்களில் இது விசேஷமான தினம். பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள். எல்லோரும் அங்குச் சென்று வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே வீட்டிலேயே முன்னோர்களை நினைத்து முதலில் தர்ப்பணம் கொடுத்து பின் படையல் போட்டு வழிபடுவது சிறப்பு.

தந்தை இல்லாத அனைவரும் இந்த அமாவாசை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே அவரவர் குடும்ப வழக்கப்படி இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். தந்தை இருக்கும் பட்சத்தில் அவர் இந்த வழிபாட்டை மேற்கொள்வார் என்பதால் மகன்கள் அதில் கூட இருந்தாலே போதுமானது. நம் நேரடி பித்ருக்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் சமைத்துப் படையல் இட வேண்டும். இந்த நாளில் காக்கைக்கு அன்னம் இட்ட பிறகே உணவு உட்கொள்வது வழக்கம்.

 

The post மகாளய அமாவாசை கடைப்பிடிப்பது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: