×

381 பயனாளிகளுக்கு R8.33 கோடி கடனுதவி; பேக்கரி பொருட்கள் தயாரிப்பு R3.76 லட்சம்

நாகப்பட்டினம்,அக்.1: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் 381 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 33 லட்சத்து 98 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆகாஷ் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சுய தொழில், வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆகாஷ் திட்டத்தின் பயன்கள் குறித்து ஆய்வு செய்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:
முதல்வர் கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற லட்சியத்திற்கு ஏற்ப படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்க வைத்து தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களை ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் அளித்து பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பட செய்து வருகிறார்.

அதில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும், குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவைகளின் மூலமாக பயன்பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான அரசு வழங்கும் அனைத்து மானியங்களை பெற்று பயன்பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் வாயிலாக நடப்பு ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.122.27 லட்சம் மதிப்பிலும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 164 பயனாளிகளுக்கு ரூ.277.17 லட்சம் மதிப்பிடிலும், பாரத பிரதமர் உணவுபதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் 114 பயனாளிகளுக்கு ரூ.196.18 லட்சம் மதிப்பிலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 31 பயனாளிகளுக்கு ரூ.180.36 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 381 பயனாளிகளுக்கு ரூ. 833.98 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் அருகே மஞ்சக்கொல்லை பகுதியில் உடற்பயிற்சிகூடம் ரூ.11.79 லட்சம் அமைக்கப்பட்டுள்ளது. திட்டமதிப்பில் 25 சதவீத மானியமாக ரூ.2.94 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதே போல் கிளினிக்கல் லேப் அமைக்க ரூ.13.92 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 25 சதவீத மானியமாக ரூ.3.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 சதவீத வட்டி மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தபடும் திட்டமதிப்பீட்டில் 35 சதவீதம் மானியமாக பால்பண்ணைச்சேரியில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொழில் துவங்குவதற்கு ரூ.25.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.3.76 லட்சம் மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 381 பயனாளிகளுக்கு R8.33 கோடி கடனுதவி; பேக்கரி பொருட்கள் தயாரிப்பு R3.76 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Bakery ,Nagapattinam ,Collector ,Akash ,Dinakaran ,
× RELATED டிச.26ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்